விடையவன் விண்ணுமண்ணுந் பாடல் வரிகள் (vitaiyavan vinnumannun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவொற்றியூர் தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : தொண்டைநாடு
தலம் : திருவொற்றியூர்
சுவாமி : மாணிக்கத்தியாகர்
அம்பாள் : வடிவுடையம்மை

விடையவன் விண்ணுமண்ணுந்

விடையவன் விண்ணுமண்ணுந்
தொழநின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோல்
உடைகோவணம் பல்கரந்தைச்
சடையவன் சாமவேதன்
சசிதங்கிய சங்கவெண்தோ
டுடையவன் ஊனமில்லி
யுறையும்மிடம் ஒற்றியூரே. 1

பாரிடம் பாணிசெய்யப்
பறைக்கட்செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடலாடல்
இலயஞ்சிதை யாதகொள்கைத்
தாரிடும் போர்விடையன்
தலைவன்றலை யேகலனா
ஊரிடும் பிச்சைகொள்வான்
உறையும்மிடம் ஒற்றியூரே. 2

விளிதரு நீருமண்ணும்
விசும்போடனல் காலுமாகி
அளிதரு பேரருளான்
அரனாகிய ஆதிமூர்த்தி
களிதரு வண்டுபண்செய்
கமழ்கொன்றையி னோடணிந்த
ஒளிதரு வெண்பிறையான்
உறையும்மிடம் ஒற்றியூரே. 3

அரவமே கச்சதாக
அசைத்தானலர்க் கொன்றையந்தார்
விரவிவெண் ணூல்கிடந்த
விரையார்வரை மார்பன்எந்தை
பரவுவார் பாவமெல்லாம்
பறைத்துப்படர் புன்சடைமேல்
உரவுநீ ரேற்றபெம்மான்
உறையும்மிடம் ஒற்றியூரே. 4

விலகினார் வெய்யபாவம்
விதியாலருள் செய்துநல்ல
பலகினார் மொந்தைதாளந்
தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசிநீர்கொண்
டடிமேல்அல ரிட்டுமுட்டா
துலகினா ரேத்தநின்றான்
உறையும்மிடம் ஒற்றியூரே. 5

கமையொடு நின்றசீரான்
கழலுஞ்சிலம் பும்ஒலிப்பச்
சுமையொடு மேலும்வைத்தான்
விரிகொன்றையுஞ் சோமனையும்
அமையொடு நீண்டதிண்டோ ள்
அழகாயபொற் றோடிலங்க
உமையொடுங் கூடிநின்றான்
உறையும்மிடம் ஒற்றியூரே. 6

நன்றியால் வாழ்வதுள்ளம்
உலகுக்கொரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலுங்
கருமால்வரை யேசிலையாப்
பொன்றினார் வார்சுடலைப்
பொடிநீறணிந் தாரழல்அம்
பொன்றினால் எய்தபெம்மான்
உறையும்மிடம் ஒற்றியூரே. 7

பெற்றியாற் பித்தனொப்பான்
பெருமான்கரு மானுரிதோல்
சுற்றியான் சுத்திசூலஞ்
சுடர்க்கண்ணுதல் மேல்விளங்கத்
தெற்றியாற் செற்றரக்கன்
னுடலைச்செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றுமாள்வான்
உறையும்மிடம் ஒற்றியூரே. 8

திருவினார் போதினானுந்
திருமாலுமொர் தெய்வமுன்னித்
தெரிவினாற் காணமாட்டார்
திகழ்சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவமெல்லாம்
பறையப்படர் பேரொளியோ
டொருவனாய் நின்றபெம்மான்
உறையும்மிடம் ஒற்றியூரே. 9

தோகையம் பீலிகொள்வார்
துவர்க்கூறைகள் போர்த்துழல்வார்
ஆகம செல்வனாரை
அலர்தூற்றுதல் காரணமாக்
கூகையம் மாக்கள்சொல்லைக்
குறிக்கொள்ளன்மின் ஏழுலகும்
ஓகைதந் தாளவல்லான்
உறையும்மிடம் ஒற்றியூரே. 10

ஒண்பிறை மல்குசென்னி
இறைவன்னுறை யொற்றியூரைச்
சண்பையர் தந்தலைவன்
தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்பத்தும்
பரவிப்பணிந் தேத்தவல்லார்
விண்புனை மேலுலகம்
விருப்பெய்துவர் வீடெளிதே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment