பகைத்திட்டார் புரங்கள் பாடல் வரிகள் (pakaittittar purankal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புகலூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்புகலூர்
சுவாமி : அக்கினீசுவரர்
அம்பாள் : கருந்தார்க்குழலியம்மை
பகைத்திட்டார் புரங்கள்
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும்
பாறிநீ றாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே
பொறியிலேன் உடலந் தன்னுள்
அகைத்திட்டங் கதனை நாளும்
ஐவர்கொண் டாட்ட வாடித்
திகைத்திட்டேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே. 1
மையரி மதர்த்த ஒண்கண்
மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங்
கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே
அடைக்கும்போ தாவி யார்தாஞ்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னீரே. 2
முப்பதும் முப்பத் தாறும்
முப்பதும் இடுகு ரம்பை
அப்பர்போல் ஐவர் வந்து
அதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றால்
உய்யுமா றறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனித்
திருப்புக லூர னீரே. 3
பொறியிலா அழுக்கை யோம்பிப்
பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றேன்
நீதனேன் நீதி யேதும்
அறிவிலேன் அமரர் கோவே
அமுதினை மனனில் வைக்குஞ்
செறிவிலேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே. 4
அளியினார் குழலி னார்கள்
அவர்களுக் கன்ப தாகிக்
களியினார் பாடல் ஓவாக்
கடவூர்வீ ரட்ட மென்னுந்
தளியினார் பாத நாளும்
நினைவிலாத் தகவில் நெஞ்சந்
தெளிவிலேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே. 5
இலவினார் மாதர் பாலே
இசைந்துநான் இருந்து பின்னும்
நிலவுநாள் பலவென் றெண்ணி
நீதனேன் ஆதி உன்னை
உலவிநான் உள்க மாட்டேன்
உன்னடி பரவு ஞானஞ்
செலவிலேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே. 6
காத்திலேன் இரண்டும் மூன்றுங்
கல்வியேல் இல்லை என்பால்
வாய்த்திலேன் அடிமை தன்னுள்
வாய்மையால் தூயே னல்லேன்
பார்த்தனுக் கருள்கள் செய்த
பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத்
திருப்புக லூர னீரே. 7
நீருமாய்த் தீயு மாகி
நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி
இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற் கரிய ராகி
அங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவார்
திருப்புக லூர னாரே. 8
மெய்யுளே விளக்கை ஏற்றி
வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி
உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்
அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னீரே. 9
அருவரை தாங்கி னானும்
அருமறை யாதி யானும்
இருவரும் அறிய மாட்டா
ஈசனார் இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று
கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார்
திருப்புக லூர னாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்