விரிதரு புலியுரி பாடல் வரிகள் (viritaru puliyuri) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிடைமருதூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவிடைமருதூர்
சுவாமி : மகாலிங்கேசுவரர்
அம்பாள் : பெருநலமுலையம்மை

விரிதரு புலியுரி

விரிதரு புலியுரி விரவிய அரையினர்
திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே. 1

மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே. 2

சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலரென இடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடல்நலி விலதுள வினையே. 3

விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே. 4

உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே. 5

ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை அடிகள தறைகழல்
எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே. 6

கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடமிடை மருதே. 7

செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடைமருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே. 8

அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே. 9

குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே. 10

பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்
பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment