முத்தினை மணியைப் பாடல் வரிகள் (muttinai maniyaip) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நெஞ்சம்ஈசனைநினைந்த தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : நெஞ்சம்ஈசனைநினைந்தமுத்தினை மணியைப்

முத்தினை மணியைப் பொன்னை
முழுமுதற் பவள மேய்க்குங்
கொத்தினை வயிர மாலைக்
கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக்
கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே. 1

முன்பனை யுலகுக் கெல்லாம்
மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை இலங்கு சோதி
இறைவனை அரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக்
களிற்றினை யுரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே. 2

கரும்பினு மினியான் றன்னைக்
காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை
இறப்பொடு பிறப் பிலானைப்
பெரும்பொருட் கிளவி யானைப்
பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே. 3

செருத்தனை யருத்தி செய்து
செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனைக் கனக மேனிக்
கடவுளைக் கருதும் வானோர்க்
கொருத்தனை யொருத்தி பாகம்
பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்சம்
நேர்பட நினைந்த வாறே. 4

கூற்றினை யுதைத்த பாதக்
குழகனை மழலை வெள்ளே
றேற்றனை இமையோ ரேத்த
இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை அடிய ரேத்தும்
அமுதனை அமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்சம்
நேர்பட நினைந்த வாறே. 5

கருப்பனைத் தடக்கை வேழக்
களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி
வியன்கயி லாய மென்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை
பங்கனை அங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்சம்
நேர்பட நினைந்த வாறே. 6

நீதியால் நினைப்பு ளானை
நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்க வெண்ணீற்
றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா
விளக்கினை அளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே. 7

பழகனை யுலகுக் கெல்லாம்
பருப்பனைப் பொருப்போ டொக்கும்
மழகளி யானை யின்றோல்
மலைமகள் நடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள்
குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே. 8

விண்ணிடை மின்னொப் பானை
மெய்ப்பெரும் பொருளொப் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக்
கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை யெண்ண லாகா
இருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே. 9

உரவனைத் திரண்ட திண்டோ ள்
அரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி
நீண்முடி யமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் டிங்கள்
சடையிடைப் பொதியும் ஐவாய்
அரவனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment