என்றுமரி யானயல பாடல் வரிகள் (enrumari yanayala) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருகோகர்ணம் – கோகர்ணா தலம் துளுவநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : துளுவநாடு
தலம் : திருகோகர்ணம் – கோகர்ணா
சுவாமி : மாபலநாதர்
அம்பாள் : கோகரணநாயகியம்மை

என்றுமரி யானயல

என்றுமரி யானயல வர்க்கியலி
சைப்பொருள்க ளாகியெனதுள்
நன்றுமொளி யானொளிசி றந்தபொன்மு
டிக்கடவுள் நண்ணுமிடமாம்
ஒன்றிய மனத்தடியர் கூடியிமை யோர்பரவும் நீடரவமார்
குன்றுகள் நெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே. 1

பேதைமட மங்கையொரு பங்கிட
மிகுத்திடப மேறியமரர்
வாதைபட வண்கடலெ ழுந்தவிட
முண்டசிவன் வாழுமிடமாம்
மாதரொடும் ஆடவர்கள் வந்தடியி
றைஞ்சிநிறை மாமலர்கள்தூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல்
கின்றவளர் கோகரணமே. 2

முறைத்திறம் உறப்பொருள் தெரிந்துமுனி
வர்க்கருளி யாலநிழல்வாய்
மறைத்திறம றத்தொகுதி கண்டுசம
யங்களைவ குத்தவனிடந்
துறைத்துறை மிகுத்தருவி தூமலர்
சுமந்துவரை யுந்திமதகைக்
குறைத்தறையி டக்கரி புரிந்திடறு
சாரல்மலி கோகரணமே. 3

இலைத்தலை மிகுத்தபடை யெண்கரம்
விளங்கஎரி வீசிமுடிமேல்
அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில்
வைத்தஅழ கன்றனிடமாம்
மலைத்தலை வகுத்தமுழை தோறும்உழை
வாளரிகள் கேழல்களிறு
கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை
யாடிநிகழ் கோகரணமே. 4

தொடைத்தலை மலைத்திதழி துன்னிய
எருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சிய தபோதனன்
எமாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு
வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி
தீரநல்கு கோகரணமே. 5

நீறுதிரு மேனிமிசை யாடிநிறை
வார்கழல்சி லம்பொலிசெய
ஏறுவிளை யாடவிசை கொண்டிடு
பலிக்குவரும் ஈசனிடமாம்
ஆறுசம யங்களும் விரும்பியடி
பேணியரன் ஆகமமிகக்
கூறுமனம் வேறிரதி வந்தடியர்
கம்பம்வரு கோகரணமே. 6

கல்லவடம் மொந்தைகுழல் தாளமலி
கொக்கரைய ரக்கரைமிசை
பல்லபட நாகம்விரி கோவணவர்
ஆளுநகர் என்பரயலே
நல்லமட மாதரரன் நாமமும்
நவிற்றிய திருத்தமுழுகக்
கொல்லவிட நோயகல்த ரப்புகல்கொ
டுத்தருளு கோகரணமே. 7

வரைத்தலம் நெருக்கிய முருட்டிருள்
நிறத்தவன வாய்கள்அலற
விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு
மானினிது மேவுமிடமாம்
புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி
வாகிவினை தீரஅதன்மேல்
குரைத்தலை கழற்பணிய ஓமம்வில
கும்புகைசெய் கோகரணமே. 8

வில்லிமையி னால்விறல ரக்கனுயிர்
செற்றவனும் வேதமுதலோன்
இல்லையுள தென்றிகலி நேடஎரி
யாகியுயர் கின்றபரனூர்
எல்லையில் வரைத்தகடல் வட்டமும்
இறைஞ்சிநிறை வாசமுருவக்
கொல்லையில் இருங்குறவர் தம்மயிர்
புலர்த்திவளர் கோகரணமே. 9

நேசமில் மனச்சமணர் தேரர்கள்நி
ரந்தமொழி பொய்கள்அகல்வித்
தாசைகொள் மனத்தையடி யாரவர்
தமக்கருளும் அங்கணனிடம்
பாசமத றுத்தவனி யிற்பெயர்கள்
பத்துடைய மன்னன்அவனைக்
கூசவகை கண்டுபின் அவற்கருள்கள்
நல்கவல கோகரணமே. 10

கோடலர வீனும்விரி சாரல்முன்
நெருங்கிவளர் கோகரணமே
ஈடமினி தாகவுறை வானடிகள்
பேணியணி காழிநகரான்
நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய்
ஞானசம் பந்தன்மொழிகள்
பாடவல பத்தரவர் எத்திசையும்
ஆள்வர்பர லோகமெளிதே.

இத்தலம் துளுவதேசத்திலிருப்பது; அந்தத்தேயத்தில் இது ஒரேதலம்.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment