விண்ணவர் மகுட பாடல் வரிகள் (vinnavar makuta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவின்னம்பர் – இன்னம்பூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவின்னம்பர் – இன்னம்பூர்
சுவாமி : எழுத்தறிந்தவீசுவரர்
அம்பாள் : கொந்தார்பூங்குழலம்மை
விண்ணவர் மகுட
விண்ணவர் மகுட கோடி
மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்
பேடலி யாணர் போலும்
வண்ணமால் அயனுங் காணா
மால்வரை எரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும்
இன்னம்பர் ஈச னாரே. 1
பன்னிய மறையர் போலும்
பாம்பரை யுடையர் போலுந்
துன்னிய சடையர் போலுந்
தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும்
மாதிடம் மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே. 2
மறியொரு கையர் போலும்
மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப்
பணிகொள வல்லர் போலுஞ்
செறிவுடை அங்க மாலை
சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே. 3
விடமலி கண்டர் போலும்
வேள்வியை அழிப்பர் போலுங்
கடவுநல் விடையர் போலுங்
காலனைக் காய்வர் போலும்
படமலி அரவர் போலும்
பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந் தருள்வர் போலும்
இன்னம்பர் ஈச னாரே. 4
அளிமலர்க் கொன்றை துன்றும்
அவிர்சடை யுடையர் போலுங்
களிமயிற் சாய லோடுங்
காமனை விழிப்பர் போலும்
வெளிவளர் உருவர் போலும்
வெண்பொடி யணிவர் போலும்
எளியவர் அடியர்க் கென்றும்
இன்னம்பர் ஈச னாரே. 5
கணையமர் சிலையர் போலுங்
கரியுரி உடையர் போலுந்
துணையமர் பெண்ணர் போலுந்
தூமணிக் குன்றர் போலும்
அணையுடை அடியர் கூடி
அன்பொடு மலர்கள் தூவும்
இணையடி உடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே. 6
பொருப்பமர் புயத்தர் போலும்
புனலணி சடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு
மார்பில்வெண் ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும்
உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே. 7
காடிடம் உடையர் போலுங்
கடிகுரல் விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும்
வெண்மதிக் கொழுந்தர் போலுங்
கோடலர் வன்னி தும்பை
கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே. 8
காறிடு விடத்தை யுண்ட
கண்டரெண் டோ ளர் போலும்
நீறுடை யுருவர் போலும்
நினைப்பினை அரியர் போலும்
பாறுடைத் தலைகை ஏந்திப்
பலிதிரிந் துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும்
இன்னம்பர் ஈச னாரே. 9
ஆர்த்தெழு மிலங்கைக் கோனை
அருவரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது
படைகொடுத் தருள்வர் போலுந்
தீர்த்தமாங் கங்கை தன்னைத்
திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தஏ ழுலகும் வைத்தார்
இன்னம்பர் ஈச னாரே.
இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்