விண்ண மர்ந்தன பாடல் வரிகள் (vinna marntana) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருபுறவார்பனங்காட்டூர் – பனையபுரம் தலம் நடுநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : நடுநாடு
தலம் : திருபுறவார்பனங்காட்டூர் – பனையபுரம்
சுவாமி : பனங்காட்டீசர்
அம்பாள் : புறவம்மை

விண்ண மர்ந்தன

விண்ண மர்ந்தன மும்ம தில்களை
வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய
பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே. 1

நீடல் கோடல் அலரவெண் முல்லை
நீர்ம லர்நிறைத் தாத ளஞ்செயப்
பாடல்வண் டறையும் புறவார் பனங்காட்டூர்த்
தோடி லங்கிய லாத யல்மின்
துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ்சங் கரனே அடைந்தார்க் கருளாயே. 2

வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை
வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளையொண் கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத
மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே. 3

மேய்ந்திளஞ் செந்நெல் மென்க திர்கவ்வி
மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்ததண் பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும்
அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந் தவத்தார்க் கருளாயே. 4

செங்க யல்லொடு சேல்செ ருச்செயச்
சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக்
கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கையா டலனே அடியார்க் கருளாயே. 5

நீரி னார்வரை கோலி மால்கடல்
நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு
கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்
சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே. 6

கைய ரிவையர் மெல்வி ரல்லவை
காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
மெய்ய ரிவையோர் பாக மாகவும்
மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
பொய்யிலா அடிமை புரிந்தார்க் கருளாயே. 7

தூவி யஞ்சிறை மெல்ந டையன
மல்கி யொல்கிய தூம லர்ப்பொய்கைப்
பாவில்வண் டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன
தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவிய பெருமான் என்பவர்க் கருளாயே. 8

அந்தண் மாதவி புன்னை நல்ல
அசோக மும்மர விந்த மல்லிகை
பைந்தண்ஞா ழல்கள்சூழ் புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன்
என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம்ஆ யவனே தவத்தார்க் கருளாயே. 9

நீண மார்முரு குண்டு வண்டினம்
நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில்யாழ் முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும்
நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே. 10

மையி னார்மணி போல்மி டற்றனை
மாசில் வெண்பொடிப் பூசு மார்பனைப்
பையதேன் பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள்
ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள்பா டவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment