விளங்கியசீர்ப் பிரமனூர் பாடல் வரிகள் (vilankiyacirp piramanur) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பிரமபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பிரமபுரம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

விளங்கியசீர்ப் பிரமனூர்

விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலிவெங்
குருமேற் சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்வண்
புறவ மண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் கொச்சைகழு
மலமென் றின்ன
இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் பகையெறிவித்
திறைவ னூரே. 1

திருவளருங் கழுமலமே கொச்சைதே வேந்திரனூர்
அயனூர் தெய்வத்
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர் காழிதகு
சண்பை யொண்பா
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய் தோணிபுரம்
உயர்ந்த தேவர்
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் கண்டத்தோன்
விரும்பு மூரே. 2

வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் பூந்தராய்
சிலம்பன் வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழிற் காழியிறை
கொச்சை யம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய மிக்கயனூர்
அமரர் கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ தரன்நாளும்
அமரு மூரே. 3

மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் புகலிதராய்
தோணி புரம்வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே கொச்சைதே
வேந்திர னூர்சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற் சிலம்பனூர்
காழி சண்பை
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் பயன்நுகர்வோர்
பரவு மூரே. 4

தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி வயங்கொச்சை
தயங்கு பூமேல்
விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர் விண்ணவர்தங்
கோனூர் வென்றித்
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருச்செல் வம்பெருகு
தோணி புரஞ்சீர்
உரைசேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம் உலகத்தில்
உயர்ந்த வூரே. 5

புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு சிரபுரம்பூங்
காழி சண்பை
எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி பூந்தராய்
தோணி புரஞ்சீர்
வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற் கொச்சை
வானவர்தங் கோனூர்
அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை யுதைத்துகந்த
அப்ப னூரே. 6

வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங் கோனூர்வண்
புகலி யிஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு சண்பைவியன்
காழி கொச்சை
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந் தோணிபுரம்
பூந்த ராய்சீர்ப்
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம் பால்வண்ணன்
பயிலு மூரே. 7

மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர்
காழி மூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை வேணுபுரங்
கமல நீடு
கூடியவ னூர்வளர்வெங் குருப்புகலி தராய்தோணி
புரங்கூ டப்போர்
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள் செற்றமலைச்
சிலைய னூரே. 8

இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம் பூந்தராய்
சிலம்பன் தன்னூர்
நிரக்கவரு புனற்புறவம் நின்றதவத் தயனூர்சீர்த்
தேவர் கோனூர்
வரக்கரவாப் புகலிவெங் குருமாசி லாச்சண்பை
காழி கொச்சை
அரக்கன்விறல் அழித்தருளி கழுமலமந் தணர்வேத
மறாத வூரே. 9

மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங் கொச்சையிந்
திரனூர் மெய்ம்மை
நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார் குருப்புகலி
தராய்தூ நீர்மேல்
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் சிலம்பனூர்
செருச்செய் தன்று
மாலோடும் அயனறியான் வண்காழி சண்பைமண்ணோர்
வாழ்த்து மூரே. 10

ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் கொச்சைகழு
மலமன் பானூர்
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமொண்
புறவ நண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர் புகலிவெங்
குருவு மென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா வகைநின்றான்
தங்கு மூரே. 11

அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய் தோணிபுரம்
அணிநீர்ப் பொய்கைப்
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் புகழ்க்காழி
சண்பை தொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் வேணுபுரம்
அயனூர் மேலிச்
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன தமிழ்தரிப்போர்
தவஞ்செய் தோரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment