வெறிவிரவு கூவிளநற் பாடல் வரிகள் (veriviravu kuvilanar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவதிகைவீரட்டானம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : நடுநாடு
தலம் : திருவதிகைவீரட்டானம்
சுவாமி : வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : திரிபுரசுந்தரி
வெறிவிரவு கூவிளநற்
வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை
வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்
பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை
அறிதற் கரியசீ ரம்மான் றன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை
எறிகெடிலத் தானை இறைவன் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 1
வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை
வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னைப்
புள்ளி வரிநாகம் பூண்டான் றன்னைப்
பொன்பிதிர்ந் தன்ன சடையான் றன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை
வாரா வுலகருள வல்லான் றன்னை
எள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 2
முந்தி யுலகம் படைத்தான் றன்னை
மூவா முதலாய மூர்த்தி தன்னைச்
சந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னைத்
தவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னைச்
சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்
செழுங்கெடில வீரட்ட மேவி னானை
எந்தை பெருமானை ஈசன் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 3
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
மதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும்
அந்தரமு மலைகடலு மானான் றன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னைக்
கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்
கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை
இந்திரனும் வானவருந் தொழச்செல் வானை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 4
ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்
உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்
வருபிறப்பொன் றுணராது மாசு பூசி
வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
அருபிறப்பை அறுப்பிக்கும் அதிகை யூரன்
அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா
திருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்
டேழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 5
ஆறேற்க வல்ல சடையான் றன்னை
அஞ்சனம் போலு மிடற்றான் றன்னைக்
கூறேற்கக் கூறமர வல்லான் றன்னைக்
கோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை
நீறேற்கப் பூசும் அகலத் தானை
நின்மலன் றன்னை நிமலன் றன்னை
ஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 6
குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு
குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட்
டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி
வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை
வானவர்க ளேத்தப் படுவான் றன்னை
எண்டிசைக்கும் மூர்த்தியாய் நின்றான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 7
உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி
ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன்
மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் றன்னை
மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 8
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை
நெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை
மறையானை மாசொன் றிலாதான் றன்னை
வானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னைக்
கறையானைக் காதார் குழையான் றன்னைக்
கட்டங்க மேந்திய கையி னானை
இறையானை எந்தை பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 9
தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து
தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட
வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் றன்னைக்
கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலு மூதுங்
கோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்
எல்லைகாண் பரியானை எம்மான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 10
முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள்
முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டித்
தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று
தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்
மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை
மதனழியச் செற்றசே வடியி னானை
இலைமறித்த கொன்றையந் தாரான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.
திருச்சிற்றம்பலம்