பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் பாடல் வரிகள் (puvarmalarkon tatiyartoluvar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவண்ணாமலை தலம் நடுநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : நடுநாடு
தலம் : திருவண்ணாமலை
சுவாமி : அருணாசலேஸ்வரர்
அம்பாள் : அபீதகுஜாம்பாள்

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார்

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார்
புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று
மூவர்க்கருள் செய்தார்
தூமாமழைநின்ற திரவெருவித்தொறுவின்
நிரையோடும்
ஆமாம் பிணைவந் தணையுஞ்சாரல்
அண்ணாமலையாரே. 1

மஞ்சைப் போழ்ந்த மதியஞ்சூடும்
வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத் தடக்கும் அதுவும்
நன்மைப் பொருள் போலும்
வெஞ்சொற்பேசும் வேடர் மடவார்
இதணம் அதுஏறி
அஞ்சொற்கிளிகள் ஆயோ
என்னும் அண்ணாமலையாரே. 2

ஞானத்திரளாய் நின்றபெருமான்
நல்ல அடியார்மேல்
ஊனத்திரளை நீக்கும்அதுவும்
உண்மைப் பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி
இழியும் இரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல்
அண்ணாமலையாரே. 3

இழைத்த இடையாள் உமையாள்பங்கர்
இமையோர் பெருமானார்
தழைத்தசடையார் விடையொன் றேறித்
தரியார் புரமெய்தார்
பிழைத்தபிடியைக் காணாதோடிப்
பெருங்கைமதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்
சாரல் அண்ணாமலையாரே. 4

உருவில்திகழும் உமையாள்பங்கர்
இமையோர் பெருமானார்
செருவில் லொருகால் வளையவூன்றிச்
செந்தீ யெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த
பருமாமணி முத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல்
அண்ணாமலையாரே. 5

எனைத்தோரூழி யடியாரேத்த
இமையோர் பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும்
நிமலருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன்
கைமேல்குழல்ஊத
அனைத்துஞ் சென்று
திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே. 6

வந்தித்திருக்கும் அடியார்தங்கள்
வருமேல் வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும்
பரமனுறை கோயில்
முந்தியெழுந்த முழவின் ஓசை
முதுகல்வரைகள் மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல்
அண்ணாமலையாரே. 7

மறந்தான்கருதி வலியைநினைந்து
மாறாயெடுத்தான்தோள்
நிறந்தான்முரிய நெறியவூன்றி
நிறையஅருள் செய்தார்
திறந்தான்காட்டி யருளாயென்று
தேவரவர்வேண்ட
அறந்தான்காட்டி அருளிச்
செய்தார் அண்ணாமலையாரே. 8

தேடிக்காணார் திருமால்பிரமன்
தேவர்பெருமானை
மூடியோங்கி முதுவேய் உகுத்த
முத்தம்பல கொண்டு
கூடிக்குறவர் மடவார்
குவித்துக் கொள்ளவம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல்
அண்ணாமலையாரே. 9

தட்டையி டுக்கித் தலையைப்பறித்துச்
சமணே நின்றுண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ளவேண்டா
பேணித் தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள்
பங்கர் மன்னியுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்
தணையும் அண்ணாமலையாரே. 10

அல்லாடரவம் இயங்குஞ்சாரல்
அண்ணாமலையாரை
நல்லார் பரவப்
படுவான்காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடலான
பத்தும் இவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்
வணங்க மன்னிவாழ்வாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment