வெண்ணிலா மதியந் பாடல் வரிகள் (vennila matiyan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவதிகைவீரட்டானம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : நடுநாடு
தலம் : திருவதிகைவீரட்டானம்
சுவாமி : வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : திரிபுரசுந்தரி
வெண்ணிலா மதியந்
வெண்ணிலா மதியந் தன்னை
விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்றங்
குணர்வினுக் குணரக் கூறி
விண்ணிலார் மீயச் சூரார்
வேண்டுவார் வேண்டு வார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயார்
அதிகைவீ ரட்ட னாரே. 1
பாடினார் மறைகள் நான்கும்
பாயிருள் புகுந்தென் உள்ளங்
கூடினார் கூட லால
வாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடல் மேவிச்
சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீ
றாடினார் ஆடல் மேவி
அதிகைவீ ரட்ட னாரே. 2
ஊனையே கழிக்க வேண்டில்
உணர்மின்கள் உள்ளத் துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு
சிந்தையுட் சிந்திக் கின்ற
ஏனைய பலவு மாகி
இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார்
அதிகைவீ ரட்ட னாரே. 3
துருத்தியாங் குரம்பை தன்னில்
தொண்ணூற்றங் கறுவர் நின்று
விருத்திதான் தருக வென்று
வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால் வல்ல வாறு
வந்துவந் தடைய நின்ற
அருத்தியார்க் கன்பர் போலும்
அதிகைவீ ரட்ட னாரே. 4
பத்தியால் ஏத்தி நின்று
பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்திஐந் தலைய நாகஞ்
சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை
உமையவள் நடுங்க அன்று
அத்தியின் உரிவை போர்த்தார்
அதிகைவீ ரட்ட னாரே. 5
வரிமுரி பாடி யென்றும்
வல்லவா றடைந்து நெஞ்சே
கரியுரி மூட வல்ல
கடவுளைக் காலத் தாலே
சுரிபுரி விரிகு ழலாள்
துடியிடைப் பரவை யல்குல்
அரிவையோர் பாகர் போலும்
அதிகைவீ ரட்ட னாரே. 6
நீதியால் நினைசெய் நெஞ்சே
நிமலனை நித்த மாகப்
பாதியாம் உமைதன் னோடும்
பாகமாய் நின்ற எந்தை
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச்
சுண்ணவெண் ணீற தாடி
ஆதியும் ஈறு மானார்
அதிகைவீ ரட்ட னாரே. 7
எல்லியும் பகலு மெல்லாந்
துஞ்சுவேற் கொருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில்
புக்கனர் காம னென்னும்
வில்லிஐங் கணையி னானை
வெந்துக நோக்கி யிட்டார்
அல்லியம் பழன வேலி
அதிகைவீ ரட்ட னாரே. 8
ஒன்றவே யுணர்தி ராகில்
ஓங்காரத் தொருவ னாகும்
வென்றஐம் புலன்கள் தம்மை
விலக்குதற் குரியீ ரெல்லாம்
நன்றவன் நார ணனும்
நான்முகன் நாடிக் காண்குற்
றன்றவர்க் கரியர் போலும்
அதிகைவீ ரட்ட னாரே. 9
தடக்கையால் எடுத்து வைத்துத்
தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்க ளோங்கக்
கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரல்தான்
முருகமர் கோதை பாகத்
தடக்கினார் என்னை யாளும்
அதிகைவீ ரட்ட னாரே.
திருச்சிற்றம்பலம்