வெள்ளத்தைச் சடையில் பாடல் வரிகள் (vellattaic cataiyil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவொற்றியூர் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : தொண்டைநாடு
தலம் : திருவொற்றியூர்
சுவாமி : மாணிக்கத்தியாகர்
அம்பாள் : வடிவுடையம்மை

வெள்ளத்தைச் சடையில்

வெள்ளத்தைச் சடையில் வைத்த
வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின்
மெய்தரு ஞானத் தீயாற்
கள்ளத்தைக் கழிய நின்றார்
காயத்துக் கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியு மாகும்
ஒற்றியூ ருடைய கோவே. 1

வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா
வானவர் இறைவன் நின்று
புசிப்பதோர் பொள்ள லாக்கை
யதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனும் அருந்த வத்தால்
ஆன்மாவி னிடம தாகி
உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார்
ஒற்றியூ ருடைய கோவே. 2

தானத்தைச் செய்து வாழ்வான்
சலத்துளே அழுந்து கின்றீர்
வானத்தை வணங்க வேண்டில்
வம்மின்கள் வல்லீ ராகில்
ஞானத்தை விளக்கை ஏற்றி
நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும்
ஒற்றியூ ருடைய கோவே. 3

காமத்துள் அழுந்தி நின்று
கண்டரால் ஒறுப்புண் ணாதே
சாமத்து வேத மாகி
நின்றதோர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடையி ராவும்
ஏகாந்தம் இயம்பு வார்க்கு
ஓமத்துள் ஒளிய தாகும்
ஒற்றியூ ருடைய கோவே. 4

சமையமே லாறு மாகித்
தானொரு சயம்பு வாகி
இமையவர் பரவி யேத்த
இனிதினங் கிருந்த ஈசன்
கமையினை யுடைய ராகிக்
கழலடி பரவு வார்க்கு
உமையொரு பாகர் போலும்
ஒற்றியூ ருடைய கோவே. 5

ஒருத்திதன் றலைச்சென் றாளைக்
கரந்திட்டான் உலக மேத்த
ஒருத்திக்கு நல்ல னாகி
மறுப்படுத் தொளித்து மீண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்
உணர்வினால் ஐயம் உண்ணி
ஒருத்திக்கு நல்ல னல்லன்
ஒற்றியூ ருடைய கோவே. 6

பிணமுடை உடலுக் காகப்
பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா
போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளால்
நினைக்குமா நினைக்கின் றார்க்கு
உணர்வினோ டிருப்பர் போலும்
ஒற்றியூ ருடைய கோவே. 7

பின்னுவார் சடையான் தன்னைப்
பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுள்
தொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி
மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவார் உள்ளத் துள்ளார்
ஒற்றியூ ருடைய கோவே. 8

முள்குவார் போகம் வேண்டின்
முயற்றியா லிடர்கள் வந்தால்
எள்குவார் எள்கி நின்றங்
கிதுவொரு மாய மென்பார்
பள்குவார் பத்த ராகிப்
பாடியு மாடி நின்று
உள்குவார் உள்ளத் துள்ளார்
ஒற்றியூ ருடைய கோவே. 9

வெறுத்துகப் புலன்க ளைந்தும்
வேண்டிற்று வேண்டு நெஞ்சே
மறுத்துக ஆர்வச் செற்றக்
குரோதங்க ளான மாயப்
பொறுத்துகப் புட்ப கத்தேர்
உடையானை அடர வூன்றி
ஒறுத்துகந் தருள்கள் செய்தார்
ஒற்றியூ ருடைய கோவே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment