வேழம் பத்தைவர் பாடல் வரிகள் (velam pattaivar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கோழம்பம் – திருக்கோழம்பியம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : கோழம்பம் – திருக்கோழம்பியம்
சுவாமி : கோகிலேஸ்வரர்
அம்பாள் : சௌந்திர நாயகி

வேழம் பத்தைவர்

வேழம் பத்தைவர்
வேண்டிற்று வேண்டிப்போய்
ஆழம் பற்றிவீழ்
வார்பல வாதர்கள்
கோழம் பத்துறை
கூத்தன் குரைகழற்
தாழும் பத்தர்கள்
சாலச் சதுரரே. 1

கயிலை நன்மலை
யாளுங் கபாலியை
மயிலி யன்மலை
மாதின் மணாளனைக்
குயில்ப யில்பொழிற்
கோழம்ப மேயவென்
உயிரி னைநினைந்
துள்ளம் உருகுமே. 2

வாழும் பான்மைய
ராகிய வான்செல்வந்
தாழும் பான்மைய
ராகித்தம் வாயினால்
தாழம் பூமணம்
நாறிய தாழ்பொழிற்
கோழம் பாவெனக்
கூடிய செல்வமே. 3

பாட லாக்கிடும்
பண்ணொடு பெண்ணிவள்
கூட லாக்கிடுங்
குன்றின் மணற்கொடு
கோடல் பூத்தலர்
கோழம்பத் துண்மகிழ்ந்
தாடுங் கூத்தனுக்
கன்புபட் டாளன்றே. 4

தளிர்கொள் மேனியள்
தான்மிக அஞ்சவோர்
பிளிறு வாரணத்
தீருரி போர்த்தவன்
குளிர்கொள் நீள்வயல்
கோழம்பம் மேவினான்
நளிர்கொள் நீர்சடை
மேலு நயந்ததே. 5

நாத ராவர்
நமக்கும் பிறர்க்குந்தாம்
வேத நாவர்
விடைக்கொடி யார்வெற்பிற்
கோதை மாதொடுங்
கோழம்பங் கோயில்கொண்
டாதி பாத
மடையவல் லார்களே. 6

முன்னை நான்செய்த
பாவ முதலறப்
பின்னை நான்பெரி
தும்மருள் பெற்றதும்
அன்ன மார்வயற்
கோழம்பத் துள்ளமர்
பின்னல் வார்சடை
யானைப் பிதற்றியே. 7

ஏழை மாரிடம்
நின்றிரு கைக்கொடுண்
கோழை மாரொடுங்
கூடிய குற்றமாங்
கூழை பாய்வயற்
கோழம்பத் தானடி
ஏழை யேன்முன்
மறந்தங் கிருந்ததே. 8

அரவ ணைப்பயில்
மாலயன் வந்தடி
பரவ னைப்பர
மாம்பரஞ் சோதியைக்
குரவ னைக்குர
வார்பொழிற் கோழம்பத்
துரவ னையொரு
வர்க்குணர் வொண்ணுமே. 9

சமர சூரபன்
மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற்
கோழம்ப மேவிய
அமரர் கோவினுக்
கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம
தாளுடை யார்களே. 10

துட்ட னாகி
மலையெடுத் தஃதின்கீழ்ப்
பட்டு வீழ்ந்து
படர்ந்துய்யப் போயினான்
கொட்டம் நாறிய
கோழம்பத் தீசனென்
றிட்ட கீத
மிசைத்த அரக்கனே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment