வள்வாய மதிமிளிரும் பாடல் வரிகள் (valvaya matimilirum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கானாட்டுமுள்ளூர் – கனட்டம்புளியூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : கானாட்டுமுள்ளூர் – கனட்டம்புளியூர்வள்வாய மதிமிளிரும்

வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 1

ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய்
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங்
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 2

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 3

பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
ஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 4

செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்
தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை
முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை
முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும்
வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 5

விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 6

அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும்
அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்
கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 7

இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்
ஈசன்றன் எண்டோ ள்கள் வீசியெரி யாடக்
குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக்
கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்
தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே
தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கி னருகே
கழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 8

குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக்
குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்
பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்
பலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத்
துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே
கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 9

தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத்
தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு
மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்
தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்
துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக்
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 10

திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவலா ரூரன்
உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய்
வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே. 11

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment