அங்கமும் வேதமும் பாடல் வரிகள் (ankamum vetamum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமருகலும்- திருச்செங்காட்டங்குடியும் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருமருகலும்- திருச்செங்காட்டங்குடியும்
சுவாமி : மாணிக்கவண்ணர்
அம்பாள் : வண்டுவார் குழலி
அங்கமும் வேதமும்
அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர் கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 1
நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
நேர்புரி நூன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 2
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்
தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயற் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 3
நாமரு கேள்வியர் வேள்வியோவா
நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 4
பாடல் முழவும் விழவும்ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்தடவும்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மே1யிடமாக ஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
பாடம் : 1 காடயலே 5
புனையழ லோம்புகை அந்தணாளர்
பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 6
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7
பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்னெடுந்தோள்வரை யாலடர்த்து
மாண்டங்கு நூன்மறையோர் பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 8
அந்தமும் ஆதியும் நான்முகனும்
அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம் அகிற்புகை யேகமழுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 9
இலைமரு தேயழ காகநாளு
மிடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
நிலையமண் தேரரை நீங்கிநின்று2
நீதரல் லார்தொழு மாமருகல்
மலைமகள் தோள்புணர் வாயருளாய்
மாசில்செங் காட்டங் குடியதனுள்
கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
பாடம் : 2 நீங்கிநின்ற,நீங்கநின்ற 10
நாலுங்குலைக்கமு கோங்குகாழி
ஞானசம் பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும்
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
சொல்லவல் லார்வினை யில்லையாமே.
திருச்சிற்றம்பலம்