Sivan Songs

சடையார்புன லுடையானொரு பாடல் வரிகள் | cataiyarpuna lutaiyanoru Thevaram song lyrics in tamil

சடையார்புன லுடையானொரு பாடல் வரிகள் (cataiyarpuna lutaiyanoru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலை
சுவாமி : வீழியழகர்
அம்பாள் : அழகுமுலையம்மை

சடையார்புன லுடையானொரு

சடையார்புன லுடையானொரு
சரிகோவணம் உடையான்
படையார்மழு வுடையான்பல
பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிடம்
உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானி
டம்வீழிம் மிழலையே. 1

ஈறாய்முத லொன்றாயிரு
பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு
பூதம்மவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ
டெட்டுத்திசை தானாய்
வேறாய்உடன் ஆனானி
டம்வீழிம் மிழலையே. 2

வம்மின்னடி யீர்நாண்மல
ரிட்டுத்தொழு துய்ய
உம்மன்பினோ டெம்மன்புசெய்
தீசன்உறை கோயில்
மும்மென்றிசை முரல்வண்டுகள்
கெண்டித் திசையெங்கும்
விம்மும்பொழில் சூழ்தண்
வயல்வீழிம் மிழலையே. 3

பண்ணும்பதம் ஏழும்பல
வோசைத்தமி ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு
தாளத்தொலி பலவும்
மண்ணும்புனல் உயிரும்வரு
காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானி
டம்வீழிம் மிழலையே. 4

ஆயாதன சமயம்பல
அறியாதவ னெறியின்
தாயானவன் உயிர்கட்குமுன்
தலையானவன் மறைமுத்
தீயானவன் சிவனெம்மிறை
செல்வத்திரு ஆரூர்
மேயானவன் உறையும்
மிடம்வீழிம் மிழலையே. 5

கல்லால்நிழற் கீழாயிடர்
காவாயென வானோர்
எல்லாம்ஒரு தேராயயன்
மறைபூட்டிநின் றுய்ப்ப
வல்லாய்1எரி காற்றீர்க்கரி
கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தா
னிடம்வீழிம் மிழலையே.

பாடம் : 1 வல்வாய் 6

கரத்தான்மலி சிரத்தான்கரி
யுரித்தாயதொர் படத்தான்
புரத்தார்பொடி படத்தன்னடி
பணிமூவர்கட் கோவா
வரத்தான்மிக அளித்தானிடம்
வளர்புன்னைமுத் தரும்பி
விரைத்தாதுபொன் மணியீன்
றணிவீழிம் மிழலையே. 7

முன்னிற்பவர் இல்லாமுரண்
அரக்கன்வட கயிலை
தன்னைப்பிடித் தெடுத்தான்முடி
தடந்தோளிற வூன்றிப்
பின்னைப்பணிந் தேத்தப்பெரு
வாள்பேரொடுங் கொடுத்த
மின்னிற்பொலி சடையானி
டம்வீழிம் மிழலையே. 8

பண்டேழுல குண்டானவை
கண்டானுமுன் அறியா
ஒண்டீயுரு வானான்உறை
கோயில்நிறை பொய்கை
வண்டாமரை மலர்மேல்மட
அன்னம்நடை பயில
வெண்டாமரை செந்தாது
திர்வீழிம் மிழலையே. 9

மசங்கற்சமண் மண்டைக்கையர்
குண்டக்குண மிலிகள்
இசங்கும்பிறப் பறுத்தானிட
மிருந்தேன்களித் திரைத்துப்
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள்
ஒளிகொண்டெழு பகலோன்
விசும்பைப்பொலி விக்கும்பொ
ழில்வீழிம் மிழலையே. 10

வீழிம்மிழ லைம்மேவிய
விகிர்தன்றனை விரைசேர்
காழிந்நகர்க் கலைஞானசம்
பந்தன்தமிழ் பத்தும்
யாழின்இசை வல்லார்சொலக்
கேட்டாரவ ரெல்லாம்
ஊழின்மலி2 வினைபோயிட
வுயர்வானடை வாரே.

பாடம் : 2 ஊழின்வலி

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment