வடிகொள் மேனியர் பாடல் வரிகள் (vatikol meniyar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிற்குடிவீரட்டம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவிற்குடிவீரட்டம்
சுவாமி : வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : ஏலவார் குழலி

வடிகொள் மேனியர்

வடிகொள் மேனியர் வானமா மதியினர்
நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை
விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
அருவினை யடையாவே. 1

களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்
கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்
பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை
விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்
வருத்தம தறியாரே. 2

கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்
தாடிய வேடத்தர்
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப்
பேணுவ ருலகத்தே. 3

பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு
கடலெழு விடமுண்டார்
வேதம் ஓதிய நாவுடை யானிடம்
விற்குடி வீரட்டம்
சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோபிணி
தீவினை கெடுமாறே. 4

கடிய ஏற்றினர் கனலன மேனியர்
அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன
தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை
விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற்
பற்றறும் அருநோயே. 5

பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்
கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்
அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி
விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்
கிடர்கள்வந் தடையாவே. 6

இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று 7

இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை
யிகலழி தரவூன்று
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு
பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி
விற்குடி வீரட்டம்
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்
துன்பநோ யடையாவே. 8

செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந்
திருவடி யறியாமை
எங்கு மாரெரி யாகிய இறைவனை
யறைபுனல் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன்
விற்குடி வீரட்டம்
தங்கை யால்தொழு தேத்தவல் லாரவர்
தவமல்கு குணத்தாரே. 9

பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ
ராடைய ரவர்வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின்
பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்
விற்குடி வீரட்டம்
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர்
கருத்துறுங் குணத்தாரே. 10

விலங்க லேசிலை யிடமென வுடையவன்
விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை யெம்பெரு மான்றனை
யெழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம்
பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
மற்றது வரமாமே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment