வடந்திகழ் மென்முலை பாடல் வரிகள் (vatantikal menmulai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கற்குடி – உய்யக்கொண்டான்மலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : கற்குடி – உய்யக்கொண்டான்மலை
சுவாமி : உஜ்ஜீவநாதஸ்வாமி
அம்பாள் : அஞ்சனாக்ஷி

வடந்திகழ் மென்முலை

வடந்திகழ் மென்முலை யாளைப்
பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனல் மாதைத்
தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர்
துன்பமொ டின்பம தெல்லாம்
கடந்தவர் காதலில் வாழுங்
கற்குடி மாமலை யாரே. 1

அங்கமொ ராறுடை வேள்வி
யான அருமறை நான்கும்
பங்கமில் பாடலோ டாடல்
பாணி பயின்ற படிறர்
சங்கம தார்குற மாதர்
தங்கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலின் மாமதி பற்றுங்
கற்குடி மாமலை யாரே. 2

நீரக லந்தரு சென்னி
நீடிய மத்தமும் வைத்துத்
தாரகை யின்னொளி சூழ்ந்த
தண்மதி சூடிய சைவர்
போரக லந்தரு வேடர்
புனத்திடை யிட்ட விறகில்
காரகி லின்புகை விம்முங்
கற்குடி மாமலை யாரே. 3

ஒருங்களி நீயிறை வாவென்
றும்பர்கள் ஓல மிடக்கண்
டிருங்கள மார விடத்தை
இன்னமு துண்ணிய1 ஈசர்
மருங்களி யார்பிடி வாயில்
வாழ்வெதி ரின்முளை வாரிக்
கருங்களி யானை கொடுக்குங்
கற்குடி மாமலை யாரே.

பாடம் : 1 துன்னிய 4

போர்மலி திண்சிலை கொண்டு
பூதக ணம்புடை சூழப்
பார்மலி வேடுரு வாகிப்
பண்டொரு வர்க்கருள் செய்தார்
ஏர்மலி கேழல் கிளைத்த
இன்னொளி மாமணி யெங்கும்
கார்மலி வேடர் குவிக்குங்
கற்குடி மாமலை யாரே. 5

உலந்தவர் என்ப தணிந்தே
யூரிடு பிச்சைய ராகி
விலங்கல்வில் வெங்கன லாலே
மூவெயில் வேவ முனிந்தார்
நலந்தரு சிந்தைய ராகி
நாமலி மாலையி னாலே
கலந்தவர் காதலில் வாழுங்
கற்குடி மாமலை யாரே. 6

மானிடம் ஆர்தரு கையர்
மாமழு வாரும் வலத்தார்
ஊனிடை யார்தலை யோட்டில்
உண்கல னாக வுகந்தார்
தேனிடை யார்தரு சந்தின்
திண்சிறை யால்தினை வித்திக்
கானிடை வேடர் விளைக்குங்
கற்குடி மாமலை யாரே. 7

வாளமர் வீரம் நினைந்த
இராவணன் மாமலை யின்கீழ்த்
தோளமர் வன்றலை குன்றத்
தொல்விர லூன்று துணைவர்
தாளமர் வேய்தலை பற்றித்
தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளம தார்முகில் கீறுங்
கற்குடி மாமலை யாரே. 8

தண்டமர் தாமரை யானுந்
தாவியிம் மண்ணை யளந்து
கொண்டவ னும்மறிவொண் ணாக்கொள்கை
யர்வெள் விடை யூர்வர்
வண்டிசை யாயின பாட
நீடிய வார்பொழில் நீழல்
கண்டமர் மாமயி லாடுங்
கற்குடி மாமலை யாரே. 9

மூத்துவ ராடையி னாரும்
மூசு கருப்பொடி யாரும்
நாத்துவர் பொய்ம் மொழியார்கள்
நயமில் அராமதி வைத்தார்
ஏத்துயர் பத்தர்கள் சித்தர்
இறைஞ்ச அவரிட ரெல்லாம்
காத்தவர் காமரு சோலைக்
கற்குடி மாமலை யாரே. 10

காமரு வார்பொழில் சூழுங்
கற்குடி மாமலை யாரை
நாமரு வண்புகழ்க் காழி
நலந்திகழ் ஞானசம் பந்தன்
பாமரு செந்தமிழ் மாலை
பத்திவை பாடவல் லார்கள்
பூமலி வானவ ரோடும்
பொன்னுல கிற்பொலி வாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment