வகையெலா முடையாயும் பாடல் வரிகள் (vakaiyela mutaiyayum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநெய்தானம் – தில்லைஸ்தானம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருநெய்தானம் – தில்லைஸ்தானம்வகையெலா முடையாயும்

வகையெலா முடையாயும் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
பாசூர் அமர்ந்தாயும் நீயே யென்றும்
திகையெலாந் தொழச்செல்வாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே. 1

ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றுங்
கூர்த்த நடமாடி நீயே யென்றுங்
கோடிகா மேய குழகா வென்றும்
பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும்
பழையனூர் மேவிய பண்பா வென்றுந்
தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 2

அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங்
காளத்திக் கற்பகமும் நீயே யென்றும்
சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுந்
சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றும்
செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும்
நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 3

மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும்
வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும்
பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும்
பூத கணநாதன் நீயே யென்றும்
என்னா விரதத்தாய் நீயெ யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும்
நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 4

முந்தி யிருந்தாயும் நீயே யென்றும்
முன்கயிலை மேவினாய் நீயே யென்றும்
நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும்
நடமாடி நள்ளாறந் நீயே யென்றும்
பந்திப் பரியாயும் நீயே யென்றும்
பைஞ்ஞீலி மேவினாய் நீயே யென்றும்
சிந்திப் பரியாயும் நீயே யென்றும்
நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 5

தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்
ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும்
புக்காய ஏழுலகும் நீயே யென்றும்
புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும்
தெக்காரு மாகோணத் தானே யென்றும்
நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6

புகழும் பெருமையாய் நீயே யென்றும்
பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும்
இகழுந் தலையேந்தி நீயே யென்றும்
இராமேச் சரத்தின்பன் நீயே யென்றும்
அகழும் மதிலுடையாய் நீயே யென்றும்
ஆலவாய் மேவினாய் நீயே யென்றும்
திகழும் மதிசூடி நீயே யென்றும்
நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 7

வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும்
வானக் கயிலாயன் நீயே யென்றும்
கான நடமாடி நீயே யென்றும்
கடவூரில் வீரட்டன் நீயே யென்றும்
ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும்
ஒற்றியூ ராரூராய் நீயே யென்றும்
தேனாய் அமுதானாய் நீயே யென்றும்
நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 8

தந்தைதா யில்லாதாய் நீயே யென்றும்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
முந்திய முக்கணாய் நீயே யென்றும்
மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும்
நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 9

மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும்
வீழி மிழலையாய் நீயே யென்றும்
அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும்
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும்
நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment