உரவார் கலையின் கவிதைப் பாடல் வரிகள் (uravar kalaiyin kavitaip) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : பெரியநாயகி

உரவார் கலையின் கவிதைப்

உரவார் கலையின் கவிதைப்
புலவர்க் கொருநாளுங்
கரவா வண்கைக் கற்றவர்
சேருங் கலிக்காழி
அரவார் அரையா அவுணர்
புரமூன் றெரிசெய்த
சரவா என்பார் தத்துவ
ஞானத் தலையாரே. 1

மொய்சேர் வண்டுண் மும்மத
நால்வாய் முரண்வேழக்
கைபோல் வாழை காய்குலை
யீனுங் கலிக்காழி
மைசேர் கண்டத் தெண்டோள்
முக்கண் மறையோனே
ஐயா என்பார்க் கல்லல்க
ளான அடையாவே. 2

இளகக் கமலத் தீன்களி
யங்குங் கழிசூழக்
களகப் புரிசைக் கவினார்
சாருங் கலிக்காழி
அளகத் திருநல் நுதலி
பங்கா அரனேயென்
றுளகப் பாடும் அடியார்க்
குறுநோய் அடையாவே. 3

எண்ணார் முத்தம் ஈன்று
மரகதம் போற்காய்த்துக்
கண்ணார் கமுகு பவளம்
பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர் பாகா பித்தா
பிரானே யென்பார்க்கு
நண்ணா வினைகள் நாடொறும்
இன்பந் நணுகும்மே. 4

மழையார் சாரற் செம்புனல்
வந்தங் கடிவருடக்
கழையார் கரும்பு கண்வளர்
சோலைக் கலிக்காழி
உழையார் கரவா உமையாள்
கணவா வொளிர்சங்கக்
குழையா என்று கூறவல்
லார்கள் குணவோரே. 5

குறியார் திரைகள் வரைகள்
நின்றுங் கோட்டாறு
கறியார் கழிசம் பிரசங்
கொடுக்குங் கலிக்காழி
வெறியார் கொன்றைச் சடையா
விடையா என்பாரை
அறியா வினைகள் அருநோய்
பாவம் அடையாவே. 6

இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று. 7

உலங்கொள் சங்கத் தார்கலி
யோதத் துதையுண்டு
கலங்கள் வந்து கார்வய
லேறுங் கலிக்காழி
இலங்கை மன்னன் தன்னை
யிடர்கண் டருள்செய்த
சலங்கொள் சென்னி மன்னா
என்னத் தவமாமே. 8

ஆவிக் கமலத் தன்னம்
இயங்குங் கழிசூழக்
காவிக் கண்ணார் மங்கலம்
ஓவாக் கலிக்காழிப்
பூவில் தோன்றும் புத்தே
ளொடுமா லவன்தானும்
மேவிப் பரவும் அரசே
யென்ன வினைபோமே. 9

மலையார் மாடம் நீடுயர்
இஞ்சி மஞ்சாருங்
கலையார் மதியஞ் சேர்தரும்
அந்தண் கலிக்காழித்
தலைவா சமணர் சாக்கியர்க்
கென்றும் அறிவொண்ணா
நிலையா யென்னத் தொல்வினை
யாய நில்லாவே. 10

வடிகொள் வாவிச் செங்கழு
நீரிற் கொங்காடிக்
கடிகொள் தென்றல் முன்றினில்
வைகுங் கலிக்காழி
அடிகள் தம்மை அந்தமில்
ஞான சம்பந்தன்
படிகொள் பாடல் வல்லவர்
தம்மேற் பழிபோமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment