உகலி யாழ்கட பாடல் வரிகள் (ukali yalkata) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புகலி – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்புகலி – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

உகலி யாழ்கட

உகலி யாழ்கட
லோங்கு பாருளீர்
அகலி யாவினை
யல்லல் போயறும்
இகலி யார்புர
மெய்த வன்னுறை
புகலி யாம்நகர்
போற்றி வாழ்மினே. 1

பண்ணி யாள்வதோ
ரேற்றர் பால்மதிக்
கண்ணி யார்கமழ்
கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை
யும்பு கலியை
நண்ணு மின்னல
மான வேண்டிலே. 2

வீசு மின்புரை
காதன் மேதகு
பாச வல்வினை
தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன்
பூம்பு கலியைப்
பேசு மின்பெரி
தின்ப மாகவே. 3

கடிகொள் கூவிளம்
மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம்
பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன்
பூம்பு கலியுள்
அடிக ளையடைந்
தன்பு செய்யுமே. 4

பாதத் தாரொலி
பல்சி லம்பினன்
ஓதத் தார்விட
முண்ட வன்படைப்
பூதத் தான்புக
லிந்ந கர்தொழ
ஏதத் தார்க்கிட
மில்லை யென்பரே. 5

மறையி னான்ஒலி
மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர்
புன்ச டையனெம்
பொறையி னானுறை
யும்பு கலியை
நிறையி னால்தொழ
நேச மாகுமே. 6

கரவி டைமனத்
தாரைக் காண்கிலான்
இரவி டைப்பலி
கொள்ளும் எம்மிறை
பொருவி டைஉயர்த்
தான்பு கலியைப்
பரவி டப்பயில்
பாவம் பாறுமே. 7

அருப்பி னார்முலை
மங்கை பங்கினன்
விருப்பி னான்அரக்
கன்னு ரஞ்செகும்
பொருப்பி னான்பொழி
லார்பு கலியூர்
இருப்பி னானடி
யேத்தி வாழ்த்துமே. 8

மாலும் நான்முகன்
தானும் வார்கழற்
சீல மும்முடி
தேட நீண்டெரி
போலும் மேனியன்
பூம்பு கலியுள்
பால தாடிய
பண்பன் நல்லனே. 9

நின்று துய்ப்பவர்
நீசர் தேரர்சொல்
ஒன்ற தாகவை
யாவு ணர்வினுள்
நின்ற வன்நிக
ழும்பு கலியைச்
சென்று கைதொழச்
செல்வ மாகுமே. 10

புல்லம் ஏறிதன்
பூம்பு கலியை
நல்ல ஞானசம்
பந்தன் நாவினாற்
சொல்லும் மாலைஈ
ரைந்தும் வல்லவர்க்
கில்லை யாம்வினை
இருநி லத்துளே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment