Sivan Songs

தொண்ட ரடித்தொழலுஞ் பாடல் வரிகள் | tonta ratittolalun Thevaram song lyrics in tamil

தொண்ட ரடித்தொழலுஞ் பாடல் வரிகள் (tonta ratittolalun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கானப்பேர் – காளையார்கோவில் தலம் பாண்டியநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : பாண்டியநாடு
தலம் : திருக்கானப்பேர் – காளையார்கோவில்தொண்ட ரடித்தொழலுஞ்

தொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ்
சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும்
புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள்
பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங்
கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோ ளுங்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 1

கூத லிடுஞ்சடையுங் கோளர வும்விரவுங்
கொக்கிற குங்குளிர்மா மத்தமும் ஒத்துனதாள்
ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந்
துள்ளுரு காவிரசும் ஓசையைப் பாடலும்நீ
ஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன்
அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக்
காத லுறத்தொழுவ தென்றுகொ லோவடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 2

நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை
நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத்
தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத்
தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை
வானிடை மாமதியை மாசறு சோதியனை
மாருத மும்மனலும் மண்டல மும்மாய
கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 3

செற்றவர் முப்புரம்அன் றட்ட சிலைத்தொழிலார்
சேவக முந்நினைவார் பாவக முந்நெறியுங்
குற்றமில் தன்னடியார் கூறும் இசைப்பரிசுங்
கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும்
மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை
மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக்
கற்றன வும்பரவிக் கைதொழல் என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 4

கொல்லை விடைக்கழகுங் கோல நறுஞ்சடையிற்
கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே
முல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால்
மோகம் மிகுத்திலங்குங் கூறுசெய் யெப்பரிசுந்
தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந்
திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்
கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 5

பண்ணு தலைப்பயனார் பாடலும் நீடுதலும்
பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளித்
தெண்ணு தலைப்பெருமான் என்றெழு வாரவர்தம்
ஏசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி
நண்ணு தலைப்படுமா றெங்ஙனம் என்றயலே
நைகிற என்னைமதித் துய்யும்வண் ணமருளுங்
கண்ணு தலைக்கனியைக் காண்பதும் என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 6

மாவை உரித்ததள்கொண் டங்கம் அணிந்தவனை
வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை
மூவர் உருத்தனதாம் மூல முதற்கருவை
மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்
பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப்
பால்நறு நெய்தயிரைந் தாடு பரம்பரனைக்
காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 7

தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்
சுண்டத னுக்கிறவா தென்றும் இருந்தவனை
ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா
அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும்
ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தங்
கண்டனை அன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 8

நாதனை நாதமிகுத் தோசைய தானவனை
ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை
மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்
பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனையாள் தோழனை நாயகனைத்
தாழ்மக ரக்குழையுந் தோடும் அணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 9

கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்
பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்
உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும்
ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்
பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்
பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்
மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment