திருமலர்க் கொன்றைமாலை பாடல் வரிகள் (tirumalark konraimalai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சாத்தமங்கை – சியத்தன்மங்கை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்சாத்தமங்கை – சியத்தன்மங்கை
சுவாமி : அயவந்தீசுவரர்
அம்பாள் : மலர்க்கணம்பிகையம்மை
திருமலர்க் கொன்றைமாலை
திருமலர்க் கொன்றைமாலை
திளைக்கும்மதி சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணிதன்னோ
டுடனாவது மேற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேகம்
உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கை
அருமல ராதிமூர்த்தி
அயவந்திய மர்ந்தவனே. 1
பொடிதனைப் பூசுமார்பிற்
புரிநூலொரு பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோ
டுடனாவதுங் கூடுவதே
கடிமணம் மல்கிநாளுங்
கமழும்பொழிற் சாத்தமங்கை
அடிகள்நக் கன்பரவ
அயவந்திய மர்ந்தவனே. 2
நூனலந் தங்குமார்பில்
நுகர்நீறணிந் தேறதேறி
மானன நோக்கிதன்னோ
டுடனாவது மாண்பதுவே
தானலங் கொண்டுமேகந்
தவழும்பொழிற் சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்தஎம்மான்
அயவந்திய மர்ந்தவனே. 3
மற்றவின் மால்வரையா
மதிலெய்துவெண் ணீறுபூசிப்
புற்றர வல்குலாளோ
டுடனாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை
நகர்கைதொழச் செய்தபாவம்
அற்றவர் நாளுமேத்த
அயவந்திய மர்ந்தவனே. 4
வெந்தவெண் ணீறுபூசி
விடையேறிய வேதகீதன்
பந்தண வும்விரலாள்
உடனாவதும் பாங்கதுவே
சந்தமா றங்கம்வேதம்
தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
அந்தமாய் ஆதியாகி
அயவந்திய மர்ந்தவனே. 5
வேதமாய் வேள்வியாகி
விளங்கும்பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகந்
நிலைதான்சொல்ல லாவதொன்றே
சாதியால் மிக்கசீரால்
தகுவார்தொழுஞ் சாத்தமங்கை
ஆதியாய் நின்றபெம்மான்
அயவந்திய மர்ந்தவனே. 6
இமயமெல் லாம்இரிய
மதிலெய்துவெண் ணீறுபூசி
உமையையொர் பாகம்வைத்த
நிலைதானுன்ன லாவதொன்றே
சமயமா றங்கம்வேதந்
தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
அமையவே றோங்குசீரான்
அயவந்திய மர்ந்தவனே. 7
பண்ணுலாம் பாடல்வீணை
பயில்வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான்
மகள்பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியந்
தவழும்பொழிற் சாத்தமங்கை
அண்ணலாய் நின்றஎம்மான்
அயவந்திய மர்ந்தவனே. 8
பேரெழில் தோளரக்கன்
வலிசெற்றதும் பெண்ணொர்பாகம்
ஈரெழிற் கோலமாகி
யுடனாவதும் ஏற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு
கனகம்மனை யானுங்காணா
ஆரழல் வண்ணமங்கை
அயவந்திய மர்ந்தவனே. 9
கங்கையோர் வார்சடைமேல்
அடையப்புடை யேகமழும்
மங்கையோ டொன்றிநின்றம்
மதிதான்சொல்ல லாவதொன்றே
சங்கையில் லாமறையோர்
அவர்தாந்தொழு சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தாய்
அயவந்திய மர்ந்தவனே. 10
மறையினார் மல்குகாழித்
தமிழ்ஞானசம் பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்கன்
நெடுமாநக ரென்றுதொண்டர்
அறையுமூர் சாத்தமங்கை
அயவந்திமே லாய்ந்தபத்தும்
முறைமையா லேத்தவல்லார்
இமையோரிலும் முந்துவரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது; சாத்தமங்கை என்பது ஸ்தலம், அயவந்தி என்பது ஆலயம்.
திருச்சிற்றம்பலம்