தெண்டிரை தேங்கி பாடல் வரிகள் (tentirai tenki) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவலம்புரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவலம்புரம்
சுவாமி : வலம்புரநாதர்
அம்பாள் : வடுவகிர்க்கண்ணம்மை
தெண்டிரை தேங்கி
தெண்டிரை தேங்கி ஓதஞ்
சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர் கோனைத்
தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும்
வலம்புரத் தடிகள் தம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக்
குழகர்தாம் இருந்த வாறே. 1
மடுக்களில் வாளை பாய
வண்டினம் இரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற்
பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை ஏந்தித்
தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர்
வலம்புரத் திருந்த வாறே. 2
தேனுடை மலர்கள் கொண்டு
திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டே
அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும்
வலம்புரத் தடிகள் தம்மை
நானடைந் தேத்தப் பெற்று
நல்வினைப் பயனுற் றேனே. 3
முளைஎயிற் றிளநல் ஏனம்
பூண்டுமொய் சடைகள் தாழ
வளைஎயிற் றிளைய நாகம்
வலித்தரை யிசைய வீக்கிப்
புளைகய போர்வை போர்த்துப்
புனலொடு மதியஞ் சூடி
வளைபயில் இளைய ரேத்தும்
வலம்புரத் தடிகள் தாமே. 4
சுருளுறு வரையின் மேலாற்
றுளங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த
இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறும் அடிய ரெல்லாம்
அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதங் கேட்டார்
வலம்புரத் தடிக ளாரே. 5
நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால்
நீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங்
கன்பினால் அமைய வாட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை
மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே
இனிவலம் புரவ னீரே. 6
செங்கயல் சேல்கள் பாய்ந்து
தேம்பழ மினிய நாடித்
தங்கயந் துறந்து போந்து
தடம்பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக்
கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார்
வலம்புரத் தடிக ளாரே. 7
அருகெலாங் குவளை செந்நெல்
அகவிலை யாம்பல் நெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும்
பழம்விழும் படப்பை யெல்லாங்
குருகினங் கூடி யாங்கே
கும்மலித் திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும்
வலம்புரத் தடிக ளாரே. 8
கருவரை யனைய மேனிக்
கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேல்
திசைமுக னவனுங் காணான்
ஒருவரை உச்சி ஏறி
ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை யானார்
அவர்வலம் புரவ னாரே. 9
வாளெயி றிலங்க நக்கு
வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற
அரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந்
தொலைந்துடன் அழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பார்
அவர்வலம் புரவ னாரே.
இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்