தண்ணியல் வெம்மையி பாடல் வரிகள் (tanniyal vem maiyi) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநன்னிலத்துப்பெருங்கோயில் – நன்னிலம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநன்னிலத்துப்பெருங்கோயில் – நன்னிலம்தண்ணியல் வெம்மையி

தண்ணியல் வெம்மையி னான்றலை
யிற்கடை தோறும்பலி
பண்ணியல் மென்மொழி யார்இடக்*
கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறை யோர்முறை
யாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே.

( * இடம் என்றும் பாடம்) 1

வலங்கிளர் மாதவஞ் செய்மலை
மங்கையோர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கைதங் கச்சடை
யொன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில் தண்பனி
வெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. 2

கச்சிய னின்கருப் பூர்விருப்
பன்கரு திக்கசிவார்
உச்சியன் பிச்சையுண் ணியுல
கங்களெல் லாமுடையான்
நொச்சியம் பச்சிலை யான்நுரை
தீர்புன லாற்றொழுவார்
நச்சிய நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. 3

பாடிய நான்மறை யான்படு
பல்பிணக் காடரங்கா
ஆடிய மாநடத் தானடி
போற்றியென் றன்பினராய்ச்
சூடிய செங்கையி னார்பல
தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. 4

பிலந்தரு வாயினொ டுபெரி
தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம் இருபிள
வாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள் கோன்நெடு
மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. 5

வெண்பொடி மேனியி னான்கரு
நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடை யான்பிர
மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறை யோர்பயின்
றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. 6

தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை
யன்சுடர் வெண்மழுவாட்
படைமலி கையன்மெய் யிற்பகட்
டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கம லம்மலர்
மேல்மட வன்னம்மன்னி
நடைமலி நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. 7

குளிர்தரு திங்கள்கங் கைகுர
வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடை மேலுடை
யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங் கைதட
மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. 8

கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங்
கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்திய ருச்சுன
னுக்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழ வில்தகு
சைவர் தவத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. 9

கருவரை போலரக் கன்கயி
லைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லாலடர்த் தின்னருள்
செய்த உமாபதிதான்
திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை
வன்றிகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. 10

கோடுயர் வெங்களிற் றுத்திகழ்
கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனைச்
சேடியல் சிங்கிதந் தைசடை
யன்றிரு வாரூரன்
பாடிய பத்தும்வல் லார்புகு
வார்பர லோகத்துளே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment