ஏரிசையும் வடவாலின் பாடல் வரிகள் (ericaiyum vatavalin) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலை
சுவாமி : வீழியழகர்
அம்பாள் : அழகுமுலையம்மை

ஏரிசையும் வடவாலின்

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
கீரிருவர்க் கிரங்கிநின்று
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்
பயின்றோது மோசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
பொருள்சொல்லும் மிழலையாமே. 1

பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்
தாகப்புத் தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
கண்டத்தோன் மன்னுங்கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு
மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
வீற்றிருக்கும் மிழலையாமே. 2

எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்
புரமூன்றும் எழிற்கண்நாடி
உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்
சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்
முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
வாய்காட்டும் மிழலையாமே. 3

உரைசேரும் எண்பத்து நான்குநூ
றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
அங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல
நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்
கையேற்கும் மிழலையாமே. 4

காணுமா றரியபெரு மானாகிக்
காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
பேணுமூன் றுருவாகிப் பேருலகம்
படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை
உத்தமனை இறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
போலோங்கு மிழலையாமே. 5

அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
றைம்புலனும் அடக்கிஞானப்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட
மணஞ்செய்யும் மிழலையாமே. 6

ஆறாடு சடைமுடியன் அனலாடு
மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகிச் செவ்வழிநற்
பண்பாடும் மிழலையாமே. 7

கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக்
கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்
நெரித்தவிரற் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த
சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி
விமானஞ்சேர் மிழலையாமே. 8

செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்
ஏனமொடு அன்னமாகி
அந்தமடி காணாதே அவரேத்த
வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி
நெய்சமிதை கையிற்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்
சேருமூர் மிழலையாமே. 9

எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
சாக்கியரும் என்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்
கருள்புரியும் நாதன்கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
டும்மிழியும் மிழலையாமே. 10

மின்னியலும் மணிமாடம் மிடைவீழி
மிழலையான் விரையார்பாதஞ்
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
செழுமறைகள் பயிலும்நாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
பரிந்துரைத்த பத்துமேத்தி
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
ஈசனெனும் இயல்பினோரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment