மத்த யானை ஏறி பாடல் வரிகள் (matta yanai eri) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் எதிர்கொள்பாடி – மேலைத்திருமணஞ்சேரி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : எதிர்கொள்பாடி – மேலைத்திருமணஞ்சேரிமத்த யானை ஏறி

மத்த யானை ஏறி மன்னர்
சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை
சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே. 1

தோற்றம் உண்டேல் மரணம் உண்டு
துயரம் மனைவாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு
நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்
நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே. 2

செடிகொ ளாக்கை சென்று சென்று
தேய்ந்தொல் லைவீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள்
பட்டு மயங்காதே
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர்
கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே. 3

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்
வஞ்ச மனத்தீரே
யாவ ராலும் இகழப் பட்டிங்
கல்ல லில்வீழாதே
மூவ ராயும் இருவ ராயும்
முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே. 4

அரித்து நம்மேல் ஐவர் வந்திங்
காறலைப் பான்பொருட்டாற்
சிரித்த பல்வாய் வெண்ட லைபோய்
ஊர்ப்பு றஞ்சேராமுன்
வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர்
வஞ்ச மதில்மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே. 5

பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்
பொத்தடைப் பான்பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மோ டாடி
நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்த
அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே. 6

கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச்
செற்ற மனம்நீக்கி
வாசம் மல்கு குழலி னார்கள்
வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி
என்பணிந் தேறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே. 7

இன்பம் உண்டேல் துன்பம் உண்டு
ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்னால் மோழை மையாம்
முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை
அடிக ளடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே. 8

தந்தை யாரும் தவ்வை யாரும்
எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி
வான நெறிகாட்டுஞ்
சிந்தை யீரே நெஞ்சி னீரே
திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே. 9

குருதி சோர ஆனையின் றோல்
கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன
மாலய னும்மறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்
சோதியெம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே. 10

முத்து நீற்றுப் பவள மேனிச்
செஞ்சடை யான்உறையும்
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்
பரமனை யேபணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்
சடைய னவன்சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார்
பாதம் பணிவாரே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment