Sivan Songs

தண்ணார் திங்கட் பொங்கர பாடல் வரிகள் | tannar tinkat ponkara Thevaram song lyrics in tamil

தண்ணார் திங்கட் பொங்கர பாடல் வரிகள் (tannar tinkat ponkara) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கண்ணார்கோவில் – குறுமாணக்குடி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கண்ணார்கோவில் – குறுமாணக்குடி
சுவாமி : கண்ணாயிரமுடையார்
அம்பாள் : முருகுவளர்கோதை

தண்ணார் திங்கட் பொங்கர

தண்ணார் திங்கட் பொங்கர
வந்தாழ் புனல்சூடிப்
பெண்ணா ணாய பேரரு
ளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழு
வோர்கட் கிடர்பாவம்
நண்ணா வாகும் நல்வினை
யாய நணுகும்மே. 1

கந்தமர் சந்துங் காரகி
லுந்தண் கதிர்முத்தும்
வந்தமர் தெண்ணீர் மண்ணி
வளஞ்சேர் வயல்மண்டிக்
கொந்தலர்1 சோலைக் கோகிலம்2
ஆடக் குளிர்வண்டு
செந்திசை பாடுஞ் சீர்திகழ்
கண்ணார் கோயிலே.

பாடம் : 1 கொந்தமர் 2கோகுலம் 2

பல்லியல் பாணிப் பாரிடம்
ஏத்தப் படுகானில்
எல்லி நடஞ்செய் யீசனெம்
மான்றன் இடமென்பர்
கொல்லையின் முல்லை மல்லிகை
மௌவற் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர்
கண்ணார் கோயிலே. 3

தருவளர் கானந் தங்கிய
துங்கப் பெருவேழம்
மருவளர் கோதை அஞ்ச
வுரித்து மறைநால்வர்க்
குருவளர் ஆல நீழல
மர்ந்தீங்3 குரைசெய்தார்
கருவளர் கண்ணார் கோயி
லடைந்தோர் கற்றோரே.

பாடம் : 3 நீழலறந்தீங் 4

மறுமா ணுருவாய்4 மற்றிணை
யின்றி வானோரைச்
செறுமா வலிபாற் சென்றுல
கெல்லாம் அளவிட்ட
குறுமா ணுருவன் தற்குறி
யாகக் கொண்டாடும்
கறுமா கண்டன் மேயது
கண்ணார் கோயிலே.

பாடம் : 4 மறுமானுருவாய் 5

விண்ணவ ருக்காய் வேலையுள்
நஞ்சம் விருப்பாக
உண்ணவ னைத்தே வர்க்கமு
தீந்தெவ் வுலகிற்கும்
கண்ணவ னைக்கண் ணார்திகழ்
கோயிற் கனிதன்னை
நண்ணவல் லோர்கட் கில்லை
நமன்பால் நடலையே. 6

முன்னொருகாலத் திந்திரன்
உற்ற முனிசாபம்
பின்னொரு நாளவ் விண்ணவ
ரேத்தப் பெயர்வெய்தித்
தன்னரு ளாற்கண் ஆயிரம்
ஈந்தோன் சார்பென்பர்
கன்னியர் நாளுந் துன்னமர்
கண்ணார் கோயிலே. 7

பெருக்கெண் ணாத பேதை
யரக்கன் வரைக்கீழால்
நெருக்குண் ணாத்தன் நீள்கழல்
நெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண் ணாதோர் மொய்கதிர்
வாள்தேர் முன்ஈந்த
திருக்கண் ணார்என் பார்சிவ
லோகஞ் சேர்வாரே. 8

செங்கம லப்போ தில்திகழ்
செல்வன் திருமாலும்
அங்கம லக்கண் நோக்கரும்
வண்ணத் தழலானான்
தங்கம லக்கண் ணார்திகழ்
கோயில் தமதுள்ளம்
தங்கம லத்தோ டேத்திட
அண்டத் தமர்வாரே. 9

தாறிடு பெண்ணைத் தட்டுடை
யாருந் தாம்உண்ணும்
சோறுடை யார்சொல் தேறன்மின்
வெண்ணூல் சேர்மார்பன்
ஏறுடை யன்பரன் என்பணி
வான்நீள் சடைமேலோர்
ஆறுடை யண்ணல்
சேர்வதுகண்ணார் கோயிலே. 10

காமரு கண்ணார் கோயிலு
ளானைக் கடல்சூழ்ந்த
பூமரு சோலைப் பொன்னியல்
மாடப் புகலிக்கோன்
நாமரு தொன்மைத் தன்மையுள்
ஞான சம்பந்தன்
பாமரு பாடல் பத்தும்வல்
லார்மேற் பழிபோமே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment