தானெனை முன்படைத் பாடல் வரிகள் (tanenai munpatait) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நொடித்தான்மலை – திருக்கயிலாயம் தலம் வடநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : வடநாடு
தலம் : நொடித்தான்மலை – திருக்கயிலாயம்தானெனை முன்படைத்

தானெனை முன்படைத் தானத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத்த
யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்
தான்மலை உத்தமனே. 1

ஆனை உரித்த பகைஅடி
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட் டிஒள்ளி
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தம ரர்வலஞ்
செய்தெனை ஏறவைக்க
ஆனை அருள்புரிந் தான்நொடித்
தான்மலை உத்தமனே. 2

மந்திரம் ஒன்றறி யேன்மனை
வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந்
தொண்டனெனை
அந்தர மால்விசும் பில்அழ
கானை அருள்புரிந்த
துந்தர மோநெஞ்ச மேநொடித்
தான்மலை உத்தமனே. 3

வாழ்வை உகந்தநெஞ் சேமட
வார்தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென் னைஅது
மாற்றி அமரரெல்லாஞ்
சூழ அருள்புரிந் துதொண்ட
னேன்பரம் அல்லதொரு
வேழம் அருள்புரிந் தான்நொடித்
தான்மலை உத்தமனே. 4

மண்ணுல கிற்பிறந் துநும்மை
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறு தல்தொண்ட
னேனின்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர் கள்விரும்ப
வெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித் தான்நொடித்
தான்மலை உத்தமனே. 5

அஞ்சினை ஒன்றிநின் றுஅலர்
கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மன மேவைகி
வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட
னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந் தான்நொடித்
தான்மலை உத்தமனே. 6

நிலைகெட விண்ணதி ரநில
மெங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானையே றிவழி
யேவரு வேன்எதிரே
அலைகட லால்அரை யன்அலர்
கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண் ணம்நொடித்
தான்மலை உத்தமனே. 7

அரவொலி ஆகமங் கள்அறி
வாரறி தோத்திரங்கள்
விரவிய வேதஒ லிவிண்ணெ
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந் துவழி
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந் தான்நொடித்
தான்மலை உத்தமனே. 8

இந்திரன் மால்பிர மன்னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த
யானை அருள்புரிந்து
மந்திர மாமுனி வர்இவ னாரென
எம்பெருமான்
நந்தமர் ஊரனென் றான்நொடித்
தான்மலை உத்தமனே. 9

ஊழிதோ றூழிமுற் றுமுயர்
பொன்னொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும் பின்சுவை
நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமி ழால்இசைந்
தேத்திய பத்தினையும்
ஆழி கடலரை யாஅஞ்சை
யப்பர்க் கறிவிப்பதே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment