தானலா துலக பாடல் வரிகள் (tanala tulaka) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி

தானலா துலக

தானலா துலக மில்லை
சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை
கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை
வார்குழல் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை
ஐயனை யாற னார்க்கே. 1

ஆலலால் இருக்கை இல்லை
அருந்தவ முனிவர்க் கன்று
நூலலால் நொடிவ தில்லை
நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி
மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுத மில்லை
ஐயனை யாற னார்க்கே. 2

நரிபுரி சுடலை தன்னில்
நடமலால் நவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடுந்
துணையலால் இருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்குத்
தெளிவலால் அருளு மில்லை
அரிபுரி மலர்கொண் டேத்தும்
ஐயனை யாற னார்க்கே. 3

தொண்டலாற் றுணையு மில்லை
தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை
கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணாப்
பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்கள் ஏத்தும்
ஐயனை யாற னார்க்கே. 4

எரியலா லுருவ மில்லை
ஏறலால் ஏற லில்லை
கரியலாற் போர்வை யில்லை
காண்டகு சோதி யார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப்
பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை
ஐயனை யாற னார்க்கே. 5

என்பலாற் கலனு மில்லை
எருதலா லூர்வ தில்லை
புன்புலால் நாறு காட்டிற்
பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித்
தொழுதழு தாடிப் பாடும்
அன்பலாற் பொருளு மில்லை
ஐயனை யாற னார்க்கே. 6

கீளலால் உடையு மில்லை
கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை
தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட
வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை
ஐயனை யாற னார்க்கே. 7

சகமலா தடிமை யில்லை
தானலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையான்
நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க
முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை
ஐயனை யாற னார்க்கே. 8

உமையலா துருவ மில்லை
உலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர்
நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகிக்
கழலடி பரவுந் தொண்டர்க்
கமைவிலா அருள் கொடுப்பார்
ஐயனை யாற னார்க்கே. 9

மலையலா லிருக்கை யில்லை
மதித்திடா அரக்கன் றன்னைத்
தலையலால் நெரித்த தில்லை
தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ
நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னும்
ஐயனை யாற னார்க்கே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment