தலையே நீவணங்காய் பாடல் வரிகள் (talaiye nivanankay) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஅங்கமாலை தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : திருஅங்கமாலைதலையே நீவணங்காய்

தலையே நீவணங்காய் – தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய். 1

கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ. 2

செவிகாள் கேண்மின்களோ – சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ. 3

மூக்கே நீமுரலாய் – முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய். 4

வாயே வாழ்த்துகண்டாய் – மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய். 5

நெஞ்சே நீநினையாய் – நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய். 6

கைகாள் கூப்பித்தொழீர் – கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர். 7

ஆக்கை யாற்பயனென் – அரன்
கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
வாக்கை யாற்பயனென். 8

கால்க ளாற்பயனென் – கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென். 9

உற்றா ராருளரோ – உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றார் ஆருளரோ. 10

இறுமாந் திருப்பன்கொலோ – ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலோ. 11

தேடிக் கண்டுகொண்டேன் – திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டுகொண்டேன். 12

திருச்சிற்றம்பலம்

Leave a Comment