Sivan Songs

தலைக்க லன்றலை பாடல் வரிகள் | talaikka lanralai Thevaram song lyrics in tamil

தலைக்க லன்றலை பாடல் வரிகள் (talaikka lanralai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாழ்கொளிப்புத்தூர் – திருவலபுதூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவாழ்கொளிப்புத்தூர் – திருவலபுதூர்தலைக்க லன்றலை

தலைக்க லன்றலை மேல்தரித் தானைத்
தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்
கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக்
கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை
அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை
ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 1

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 2

வெந்த நீறுமெய் பூசவல் லானை
வேத மால்விடை ஏறவல் லானை
அந்தம் ஆதிஅறி தற்கரி யானை
ஆறலைத் தசடை யானைஅம் மானைச்
சிந்தை யென்றடு மாற்றறுப் பானைத்
தேவ தேவனென் சொல்முனி யாதே
வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 3

தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத்
தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்
படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப்
பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை
நடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானை
நஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானை
மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 4

வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்
மார னார்உடல் நீறெழச் செற்றுத்
துளைத்த அங்கத்தொடு தூமலர்க் கொன்றை
தோலும்நூ லுந்துதைந் தவரை மார்பன்
திளைக்குந் தெவ்வர் திரிபுரம் மூன்றும்
அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 5

திருவின் நாயகன் ஆகிய மாலுக்
கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
உருவி னானைஒன் றாவறி வொண்ணா
மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று
செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 6

எந்தை யைஎந்தை தந்தை பிரானை
ஏத மாயஇடர் தீர்க்கவல் லானை
முந்தி யாகிய மூவரின் மிக்க
மூர்த்தி யைமுதற் காண்பரி யானைக்
கந்தின் மிக்ககரி யின்மருப் போடு
கார கில்கவ ரிம்மயிர் மண்ணி
வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 7

தேனை ஆடிய கொன்றையி னானைத்
தேவர் கைதொழுந் தேவர் பிரானை
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை
ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்
கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த
கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய
வான நாடனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 8

காளை யாகி வரையெடுத் தான்றன்
கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்
பாளை தெங்கு பழம்விழ மண்டிச்
செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 9

திருந்த நான்மறை பாடவல் லானைத்
தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்
பொருந்த மால்விடை ஏறவல் லானைப்
பூதிப் பைபுலித் தோலுடை யானை
இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்
ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்
மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 10

மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை
மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்
பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்
புனித னைப்புலித் தோலுடை யானைச்
செய்ய னைவெளி யதிரு நீற்றில்
திகழு மேனியன் மான்மறி ஏந்தும்
மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 11

வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனென்
றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்
சடையன் காதலன் வனப்பகை அப்பன்
நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்
நங்கை சிங்கடி தந்தை பயந்த
பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்
பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே. 12

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment