மருவார் குழலி மாதோர் பாடல் வரிகள் (maruvar kulali mator) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்செம்பொன்பள்ளி – செம்பொனார்க்கோயில் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்செம்பொன்பள்ளி – செம்பொனார்க்கோயில்
சுவாமி : சொர்ணபுரீஸ்வரர்
அம்பாள் : சுகுந்தகுந்தளாம்பிகை

மருவார் குழலி மாதோர்

மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத் தீசன் கழல்களை
மருவா தவர்மேல் மன்னும் பாவமே. 1

வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்
சேரா தவர்மேற் சேரும் வினைகளே. 2

வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார் விடையொன் றூரும் நம்பனை
உரையா தவர்மே லொழியா ஊனமே. 3

மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
எழிலார் புரிபுன் சடையெம் இறைவனைத்
தொழுவார் தம்மேல் துயர மில்லையே. 4

மலையான் மகளோ டுடனாய் மதிளெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே. 5

அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார் கண்டத் தீசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே. 6

பையார் அரவே ரல்கு லாளொடும்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார் சூல மேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே. 7

வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே. 8

காரார் வண்ணன் கனகம் அனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடையெம் நிமலனை
ஓரா தவர்மே லொழியா ஊனமே. 9

மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே. 10

நறவார் புகலி ஞான சம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment