பூதத்தின் படையினீர் பாடல் வரிகள் (putattin pataiyinir) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவேணுபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவேணுபுரம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

பூதத்தின் படையினீர்

பூதத்தின் படையினீர்
பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தின் ஒலியோடும்
உம்பர்வா னவர்புகுந்து
வேதத்தின் இசைபாடி
விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம்
பதியாகக் கொண்டீரே. 1

சுடுகாடு மேவினீர்
துன்னம்பெய் கோவணந்தோல்
உடையாடை யதுகொண்டீர்
உமையாளை யொருபாகம்
அடையாளம் அதுகொண்டீர்
அங்கையினிற் பரசுவெனும்
படையாள்வீர் வேணுபுரம்
பதியாகக் கொண்டீரே. 2

கங்கைசேர் சடைமுடியீர்
காலனைமுன் செற்றுகந்தீர்
திங்களோ டிளஅரவந்
திகழ்சென்னி வைத்துகந்தீர்
மங்கையோர் கூறுடையீர்
மறையோர்கள் நிறைந்தேத்தப்
பங்கயஞ்சேர் வேணுபுரம்
பதியாகக் கொண்டீரே. 3

நீர்கொண்ட சடைமுடிமேல்
நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோ
டெழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேற்
சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம்
பதியாகக் கலந்தீரே. 4

ஆலைசேர் தண்கழனி
அழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்கள்
இசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக்
கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம்
பதியாகக் கொண்டீரே. 5

மணிமல்கு மால்வரைமேல்
மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர்
சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள்
பரிந்திறைஞ்ச வேணுபுரத்
தணிமல்கு கோயிலே
கோயிலாக அமர்ந்தீரே. 6

நீலஞ்சேர் மிடற்றினீர்
நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர்
கொடுங்காலன் தனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனியழ
கார்வேணு புரம்அமருங்
கோலஞ்சேர் கோயிலே
கோயிலாகக் கொண்டீரே. 7

இரைமண்டிச் சங்கேறுங்
கடல்சூழ்தென் இலங்கையர்கோன்
விரைமண்டு முடிநெரிய
விரல்வைத்தீர் வரைதன்னிற்
கரைகண்டிப் பேரோதங்
கலந்தெற்றுங் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுர
மேயமர்ந்து மிக்கீரே. 8

தீயோம்பு மறைவாணர்க்
காதியாந் திசைமுகன்மால்
போயோங்கி யிழிந்தாரும்
போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள்
படுதிரையால் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரஞ்
செழும்பதியாத் திகழ்ந்தீரே. 9

நிலையார்ந்த வுண்டியினர்
நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலையானார் அறவுரையைப்
போற்றாதுன் பொன்னடியே
நிலையாகப் பேணிநீ
சரணென்றார் தமையென்றும்
விலையாக ஆட்கொண்டு
வேணுபுரம் விரும்பினையே. 10

இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment