Sivan Songs

புணர்ச்சிப்பத்து பாடல் வரிகள் | punarchi pathu lyrics in tamil

Punarchi pathu lyrics in tamil

புணர்ச்சிப்பத்து (punarchi pathu lyrics in tamil)

 அருளியவர்  :  மாணிக்கவாசகர்
  தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
 நாடு : பாண்டியநாடு
 சிறப்பு: அத்துவித இலக்கணம்; ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
வாளா தொழும்புகந்து
கடைபட்டேனை ஆண்டுகொண்ட
கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத்
தன்னைத் தந்த என்னா ரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 1

ஆற்ற கில்லேன் அடியேன் அரசே
அவனி தலத்தைம் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து
சிவனெம் பெருமானென்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே
உருகி ஓலமிட்டுப்
போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 2

நீண்டமாலும் அயனும் வெருவ
நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டுகொண்ட என் ஆரமுதை
அள்ளுறுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட்டலறி
விரையார் மலர் தூவிப்
பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 3

அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தவரும் அமரர்கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறையின் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 4

திகழத் திகழும் அடியும் முடியுங்
காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
அம்மான் இம்மா நிலமுழுதும்
திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு
ஆ ஆ என்ற நீர்மையெல்லாம்
புகழப் பெறுவ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 5

பரிந்து வந்து பரமானந்தம்
பண்டே அடியேற் கருள் செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில்
அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர்
உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்பதென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 6

நினையப்பிறருக் கரிய நெருப்பை
நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத் தனியை
நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம்
கனையக் கண்ணீர் அருவி பாயக்
கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெறுவதென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 7

நெக்குநெக்குள் உருகி உருகி
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி
நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர்போலும் திருமேனி
திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 8

தாதாய் மூவே ழுலகுக்குங்
தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே
பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதாம் மணியே என்றென்றேத்தி
இரவும் பகலும் எழிலார்பாதப்
போதாய்ந் தணைவதென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 9

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பானே எம்பரமா என்று
பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போதணைவ தென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 10


About the author

Aanmeegam Lyrics

Leave a Comment