பூமே லானும் பாடல் வரிகள் (pume lanum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம்
சுவாமி : ஏகாம்பரநாதர்
அம்பாள் : ஏலவார்குழலி

பூமே லானும்

பூமே லானும்
பூமகள் கேள்வனும்
நாமே தேவ
ரெனாமை நடுக்குறத்
தீமே வும்முரு
வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற்
படவடி யோங்களே. 1

அருந்தி றல்அம
ரர்அயன் மாலொடு
திருந்த நின்று
வழிபடத் தேவியோ
டிருந்த வன்னெழி
லார்கச்சி யேகம்பம்
பொருந்தச் சென்று
புடைபட் டெழுதுமே. 2

கறைகொள் கண்டத்தெண்
டோ ளிறை முக்கணன்
மறைகொள் நாவினன்
வானவர்க் காதியான்
உறையும் பூம்பொழில்
சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற்சென்று
முந்தித் தொழுதுமே. 3

பொறிப்பு லன்களைப்
போக்கறுத் துள்ளத்தை
நெறிப்ப டுத்து
நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றும்மமு
தாயவன் ஏகம்பம்
குறிப்பி னாற்சென்று
கூடித் தொழுதுமே. 4

சிந்தை யுட்சிவ
மாய்நின்ற செம்மையோ
டந்தி யாய்அன
லாய்ப்புனல் வானமாய்
புந்தி யாய்ப்புகுந்
துள்ளம் நிறைந்தவெம்
எந்தை யேகம்பம்
ஏத்தித் தொழுமினே. 5

சாக்கி யத்தொடு
மற்றுஞ் சமண்படும்
பாக்கி யம்மிலார்
பாடு செலாதுறப்
பூக்கொள் சேவடி
யான்கச்சி யேகம்பம்
நாக்கொ டேத்தி
நயந்து தொழுதுமே. 6

மூப்பி னோடு
முனிவுறுத் தெந்தமை
ஆர்ப்ப தன்முன்
னணிஅம ரர்க்கிறை
காப்ப தாய
கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்ப தாகநாஞ்
சென்றடைந் துய்துமே. 7

ஆலு மாமயிற்
சாயல்நல் லாரொடுஞ்
சால நீயுறு
மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற்
றண்ணலே கம்பனார்
கோல மாமலர்ப்
பாதமே கும்பிடே. 8

பொய்ய னைத்தையும்
விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர்
வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி
யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு
வார்க்கில்லை யல்லலே. 9

அரக்கன் றன்வலி
உன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத்
தான்முடி தோள்நெரித்
திரக்க இன்னிசை
கேட்டவன் ஏகம்பந்
தருக்க தாகநாஞ்
சார்ந்து தொழுதுமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment