புல்கு பொன்னிறம் பாடல் வரிகள் (pulku ponniram) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் அம்பர் மாகாளம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : அம்பர் மாகாளம்
சுவாமி : மாகாளேச்வரர்
அம்பாள் : பட்சநாயகி

புல்கு பொன்னிறம்

புல்கு பொன்னிறம் புரிசடை
நெடுமுடிப் போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க்
கொன்றையும் பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும்
அடியவர்க் கருவினை அடையாவே. 1

அரவம் ஆட்டுவர் அந்துகில்
புலியதள் அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர் இவையிவர்
சரிதைக ளிசைவன பலபூதம்
மரவந் தோய்பொழில் அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
பரவி யும்பணிந் தேத்தவல்
லாரவர் பயன்தலைப் படுவாரே. 2

குணங்கள் கூறியுங் குற்றங்கள்
பரவியுங் குரைகழலடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர்
பரவவுங் கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோ டணையவல்லார்களை
வல்வினை யடையாவே. 3

எங்கு மேதுமோர் பிணியிலர்
கேடிலர் இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங்
கண்ணியுந் தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
கங்கு லும்பகலுந்தொழும் அடியவர்
காதன்மை யுடையாரே. 4

நெதியம் என்னுள போகமற்
றென்னுள நிலமிசை நலமாய
கதியம் என்னுள வானவர்
என்னுளர் கருதிய பொருள் கூடில்
மதியந் தோய்பொழில் அரசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
புதியபூவொடு சாந்தமும்
புகையுங்கொண் டேத்துதல் புரிந்தோர்க்கே. 5

கண்ணு லாவிய கதிரொளி
முடிமிசைக் கனல்விடு சுடர்நாகம்
தெண்ணி லாவொடு திலகமு
நகுதலை திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழில் அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவரியாவரிவ்
வுலகினில் உயர்வாரே. 6

தூசு தானரைத் தோலுடைக்
கண்ணியஞ் சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ
தன்றியும் புகழ்புரிந் தவர்மேய
மாசு லாம்பொழில் அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
பேசு நீர்மைய ரியாவரிவ்
வுலகினிற் பெருமையைப் பெறுவாரே. 7

பவ்வ மார்கடல் இலங்கையர்
கோன்றனைப் பருவரைக் கீழூன்றி
எவ்வந்தீர அன் றிமையவர்க்
கருள்செய்த இறையவன் உறைகோயில்
மவ்வந் தோய்பொழில் அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
கவ்வை யால்தொழும் அடியவர்
மேல்வினை கனலிடைச் செதிளன்றே. 8

உய்யுங் காரணம் உண்டென்று
கருதுமின் ஒளிகிளர் மலரோனும்
பைகொள்பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்
பரவநின் றவர்மேய
மையுலாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
கையினால்தொழு தவலமும் பிணியுந்தம்
கவலையுங் களைவாரே. 9

பிண்டி பாலரும் மண்டைகொள்
தேரரும் பீலிகொண் டுழல்வாரும்
கண்ட நூலருங் கடுந்தொழி
லாளருங் கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழில் அரிசிலின்
வடகரை வருபுனல் மாகாளம்
பண்டு நாம்செய்த பாவங்கள்
பற்றறப் பரவுதல் செய்வோமே. 10

மாறு தன்னொடு மண்மிசை
யில்லது வருபுனல் மாகாளத்
தீறும் ஆதியு மாகிய
சோதியை யேறமர் பெருமானை
நாறு பூம்பொழிற் காழியுள்
ஞானசம் பந்தன தமிழ்மாலை
கூறுவாரையுங் கேட்கவல் லாரையுங்
குற்றங்கள் குறுகாவே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment