புக்க ணைந்து பாடல் வரிகள் (pukka naintu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் இலிங்கபுராணம் தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : இலிங்கபுராணம்புக்க ணைந்து

புக்க ணைந்து
புரிந்தல ரிட்டிலர்
நக்க ணைந்து
நறுமலர் கொய்திலர்
சொக்க ணைந்த
சுடரொளி வண்ணனை
மிக்குக் காணலுற்
றாரங் கிருவரே. 1

அலரு நீருங்கொண்
டாட்டித் தெளிந்திலர்
திலக மண்டலந்
தீட்டித் திரிந்திலர்
உலக மூர்த்தி
யொளிநிற வண்ணனைச்
செலவு காணலுற்
றாரங் கிருவரே. 2

ஆப்பி நீரோ
டலகுகைக் கொண்டிலர்
பூப்பெய் கூடை
புனைந்து சுமந்திலர்
காப்புக் கொள்ளி
கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணலுற்
றாரங் கிருவரே. 3

நெய்யும் பாலுங்கொண்
டாட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும்
போக்கிப் புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய
அழல்நிற வண்ணனை
மெய்யைக் காணலுற்
றாரங் கிருவரே. 4

எருக்கங் கண்ணிகொண்
டிண்டை புனைந்திலர்
பெருக்கக் கோவணம்
பீறி யுடுத்திலர்
தருக்கி னாற்சென்று
தாழ்சடை யண்ணலை
நெருக்கிக் காணலுற்
றாரங் கிருவரே. 5

மரங்க ளேறி
மலர்பறித் திட்டிலர்
நிரம்ப நீர்சுமந்
தாட்டி நினைந்திலர்
உரம்பொ ருந்தி
யொளிநிற வண்ணனை
நிரம்பக் காணலுற்
றாரங் கிருவரே. 6

கட்டு வாங்கங்
கபாலங்கைக் கொண்டிலர்
அட்ட மாங்கங்
கிடந்தடி வீழ்ந்திலர்
சிட்டன் சேவடி
சென்றெய்திக் காணிய
பட்ட கட்டமுற்
றாரங் கிருவரே. 7

வெந்த நீறு
விளங்க அணிந்திலர்
கந்த மாமலர்
இண்டை புனைந்திலர்
எந்தை ஏறுகந்
தேறெரி வண்ணனை
அந்தங் காணலுற்
றாரங் கிருவரே. 8

இளவெ ழுந்த
இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து
பிணைத்தடி யிட்டிலர்
களவு செய்தொழிற்
காமனைக் காய்ந்தவன்
அளவு காணலுற்
றாரங் கிருவரே. 9

கண்டி பூண்டு
கபாலங்கைக் கொண்டிலர்
விண்ட வான்சங்கம்
விம்மவாய் வைத்திலர்
அண்ட மூர்த்தி
அழல்நிற வண்ணனைக்
கெண்டிக் காணலுற்
றாரங் கிருவரே. 10

செங்க ணானும்
பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித்
திரிந்தவர் காண்கிலார்
இங்குற் றேனென்றி
லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப்
புண்ணிய மூர்த்தியே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment