பொடியிலங்குந் திருமேனி பாடல் வரிகள் (potiyilankun tirumeni) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

பொடியிலங்குந் திருமேனி

பொடியிலங்குந் திருமேனி
யாளர்புலி யதளினர்
அடியிலங்குங் கழலார்க்க
ஆடும்மடி கள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம்
மல்கவ்வெறி வார்திரைக்
கடியிலங்கும் புனல்முத்
தலைக்குங்கடற் காழியே 1

மயலிலங்குந் துயர்மா
சறுப்பானருந் தொண்டர்கள்
அயலிலங்கப் பணிசெய்ய
நின்றவ்வடி கள்ளிடம்
புயலிலங்குங் கொடையாளர்
வேதத்தொலி பொலியவே
கயலிலங்கும் வயற்கழனி
சூழுங்கடற் காழியே. 2

கூர்விலங்குந் திருசூல
வேலர்குழைக் காதினர்
மார்விலங்கும் புரிநூ
லுகந்தம்மண வாளனூர்
நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்
நெடுந் தாரைவாய்க்
கார்விலங்கல் லெனக்கலந்
தொழுகுங் கடற் காழியே. 3

குற்றமில்லார் குறைபாடு
செய்வார்பழி தீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன் னுயர்
த்தபெரு மானிடம்
மற்றுநல்லார் மனத்தா
லினியார்மறை கலையெலாங்
கற்றுநல்லார் பிழைதெரிந்
தளிக்குங்கடற் காழியே. 4

விருதிலங்குஞ் சரிதைத்தொழி
லார்விரி சடையினார்
எருதிலங்கப் பொலிந்தேறும்
எந்தைக்கிட மாவது
பெரிதிலங்கும் மறைகிளைஞர்
ஓதப்பிழை கேட்டலாற்
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து
தீர்க்குங்கடற் காழியே. 5

தோடிலங்குங் குழைக்காதர்
வேதர்சுரும் பார்மலர்ப்
பீடிலங்குஞ் சடைப்பெருமை
யாளர்க்கிட மாவது
கோடிலங்கும் பெரும்பொழில்கள்
மல்கப்பெருஞ் செந்நெலின்
காடிலங்கும் வயல்பயிலும்
அந்தண்கடற் காழியே. 6

மலையிலங்குஞ் சிலையாக
வேகம்மதில் மூன்றெரித்
தலையிலங்கும் புனற்கங்கை
வைத்தவ்வடி கட்கிடம்
இலையிலங்கும் மலர்க்கைதை
கண்டல்வெறி விரவலால்
கலையிலங்குங் கணத்தினம்
பொலியுங்கடற் காழியே. 7

முழுதிலங்குங் பெரும்பாருள்
வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதிரங்கச் சிரமுர
மொடுங்கவ்வடர்த் தாங்கவன்
தொழுதிரங்கத் துயர்தீர்த்
துகந்தார்க்கிட மாவது
கழுதும்புள்ளும் மதிற்புறம
தாருங்கடற் காழியே. 8

பூவினானும் விரிபோதின்
மல்குந்திரு மகள்தனை
மேவினானும் வியந்தேத்த
நீண்டாரழ லாய்நிறைந்து
ஓவியங்கே யவர்க்கருள்
புரிந்தவ்வொரு வர்க்கிடம்
காவியங்கண் மடமங்கையர்
சேர்கடற் காழியே. 9

உடைநவின் றாருடைவிட் டுழல்வார்
இருந் தவத்தார்
முடைநவின் றம்மொழி
யொழித்துகந்தம் முதல்வன்னிடம்
மடைநவின்ற புனற்கெண்டை
பாயும்வயல் மலிதரக்
கடைநவின்றந் நெடுமாடம்
ஓங்குங்கடற் காழியே. 10

கருகுமுந்நீர் திரையோத
மாருங்கடற் காழியுள்
உரகமாருஞ் சடையடிகள்
தம்பாலுணர்ந் துறுதலாற்
பெருகமல்கும் புகழ்பேணுந்
தொண்டர்க்கிசை யார்தமிழ்
விரகன்சொன்ன இவைபாடி
யாடக்கெடும் வினைகளே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment