பொருங்கைமதக் கரியுரிவைப் பாடல் வரிகள் (porunkaimatak kariyurivaip) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்பொருங்கைமதக் கரியுரிவைப்

பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப்
பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்
கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்
காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
இருங்கனக மதிலாரூர் மூலட் டானத்
தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்
அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 1

கற்பகமும் இருசுடரு மாயி னானைக்
காளத்தி கயிலாய மலையு ளானை
விற்பயிலும் மதனழிய விழித்தான் றன்னை
விசயனுக்கு வேடுவனாய் நின்றான் றன்னைப்
பொற்பமரும் பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியவெம் பெருமானைப் பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 2

பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்
பாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னை
வேதியனைத் தன்னடியார்க் கெளியான் றன்னை
மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போதியலும் பொழிலாரூர் மூலட் டானம்
புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்
ஆதியனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 3

நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை
நாகேச் சரமிடமா நண்ணி னானைச்
சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்
தத்துவனைச் சக்கரமாற் கீந்தான் றன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூலட் டானம்
இடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 4

சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச்
சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை
விடக்கிடுகா டிடமாக உடையான் றன்னை
மிக்கரண மெரியூட்ட வல்லான் றன்னை
மடற்குலவு பொழிலாரூர் மூலட் டானம்
மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 5

தாயவனை எவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்
தகுதில்லை நடம்பயிலுந் தலைவன் றன்னை
மாயவனும் மலரவனும் வானோ ரேத்த
மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் றன்னை
மேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம்
விரும்பியஎம் பெருமானை யெல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6

பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப்
புகலூரும் புறம்பயமும் மேயான் றன்னை
மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை
மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை
இருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத்
தினிதமரும் பெருமானை இமையோ ரேத்த
அருளியனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 7

காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக்
காரோணங் கழிப்பாலை மேயான் றன்னைப்
பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் றன்னைப்
பணியுகந்த அடியார்கட் கினியான் றன்னைச்
சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ்
சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற
ஆலவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 8

ஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை
ஓத்தூரும் உறையூரும் மேவி னானை
வைப்பவனை மாணிக்கச் சோதி யானை
மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானை
*மெய்ப்பொருளாய் அடியேன துள்ளே நின்ற
வினையிலியைத் திருமூலட் டானம் மேய
அப்பொன்னை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

*இச்செய்யுளின் பின்னிரு அடிகள் பிற பதிப்புகளில்
காணப்படவில்லை. 9

பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னைப்
பராய்த்துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை
இகலவனை இராவணனை இடர்செய் தானை
ஏத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்
புகழ்நிலவு பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment