போரானை ஈருரிவைப் பாடல் வரிகள் (poranai irurivaip) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலைபோரானை ஈருரிவைப்

போரானை ஈருரிவைப் போர்வை யானைப்
புலியதளே யுடையாடை போற்றி னானைப்
பாரானை மதியானைப் பகலா னானைப்
பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 1

சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு
தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னைப்
பவந்தாங்கு பாசுபத வேடத் தானைப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங்
கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னைக்
கழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச்
சிவந்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 2

அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை
அகத்தியனை யுகப்பானை அயன்மால் தேட
நின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை
நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்
வென்றானை மீயச்சூர் மேவி னானை
மெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச்
சென்றானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 3

தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்
சங்கரனைச் சந்தோக சாமம் ஒதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை
வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 4

நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த
நஞ்சமுது செய்தானை அமுத முண்ட
மற்றமரர் உலந்தாலும் உலவா தானை
வருகாலஞ் செல்காலம் வந்த காலம்
உற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா
ஒருசுடரை இருவிசும்பி னூர்மூன் றொன்றச்
செற்றவனைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 5

மைவான மிடற்றானை அவ்வான் மின்போல்
வளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும்
பெய்வானைப் பிச்சாட லாடு வானைப்
பிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம்
பொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப்
பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை
செய்வானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 6

மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை
வெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப்
புக்கானை எப்பொருட்கும் பொதுவா னானைப்
பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந்
தக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத்
தத்துவனைத் தடவரையை நடுவு செய்த
திக்கானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 7

வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் தன்னை
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை
ஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன்
உயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்ற
கானவனைக் கயிலாயம் மேவி னானைக்
கங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கென்றுந்
தேனவனைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 8

பரத்தானை யிப்பக்கம் பலவா னானைப்
பசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை வணங்குவார் மனத்து ளானை
மாருதமால் எரிமூன்றும் வாய்அம் பீர்க்காஞ்
சரத்தானைச் சரத்தையுந்தன் தாட்கீழ் வைத்த
தபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்
சிரத்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 9

அறுத்தானை அயந்தலைகள் அஞ்சி லொன்றை
அஞ்சாதே வரையெடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை
இந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல்
பறித்தானைப் பகீரதற்கா வானோர் வேண்டப்
பரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச்
செறித்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment