பொன்றிரண் டன்ன புரிசடை பாடல் வரிகள் (ponriran tanna puricatai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஅச்சிறுப்பாக்கம் தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : தொண்டைநாடு
தலம் : திருஅச்சிறுப்பாக்கம்
சுவாமி : அகத்தீஸ்வரர்
அம்பாள் : பாகம்பிரியாள்நாயகி

பொன்றிரண் டன்ன புரிசடை

பொன்றிரண் டன்ன புரிசடை புரளப்
பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1

தேனினும் இனியர் பாலன நீற்றர்
தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
ஊன்நயந் துருக உவகைகள் தருவார்
உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
வானக மிறந்து வையகம் வணங்க
வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
ஆனையின் உரிவை போர்த்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 2

காரிரு ளுருவம் மால்வரை புரையக்
களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி
நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
பேரரு ளாளர் பிறவியிற் சேரார்
பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
ஆரிருண் மாலை யாடும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 3

மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்
மலைமகள வளொடு மருவின ரெனவும்
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்
சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
தம்மல ரடியொன் றடியவர் பரவத்
தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 4

விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்
விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்
பலபுக ழல்லது பழியில ரெனவும்
எண்ணலா காத இமையவர் நாளும்
ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
அண்ணலான் ஊர்தி ஏறும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 5

நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
தோடொரு காதினிற் பெய்துவெய் தாய
சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
காடரங் காகக் கங்குலும் பகலுங்
கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
ஆடர வாட ஆடும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 6

ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
இளங்கிளை அரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 7

கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்
கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்அணங் காய
பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியுங் கருதிய அரக்கன்
பருவரை யெடுத்ததிண் தோள்களை யடர்வித்
தச்சமும் அருளுங் கொடுத்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 8

நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்
நுகர்புகர் சாந்தமொ டேந்திய மாலைக்
கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்
எய்தலா காததொ ரியல்பினை யுடையார்
தோற்றலார் மாலும் நான்முக முடைய
தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலாற் காணா ராயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 9

வாதுசெய் சமணுஞ் சாக்கியப் பேய்கள்
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்
உள்கலா காததோ ரியல்பினை யுடையார்
வேதமும் வேத நெறிகளு மாகி
விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 10

மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்
அன்புடை யடியவர் அருவினை யிலரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment