பொங்கு வெண்புரி வளரும் பாடல் வரிகள் (ponku venpuri valarum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

பொங்கு வெண்புரி வளரும்

பொங்கு வெண்புரி வளரும்
பொற்புடை மார்பன்எம் பெருமான்
செங்கண் ஆடர வாட்டுஞ்
செல்வனெம் சிவனுறை கோயில்
பங்க மில்பல மறைகள்
வல்லவர் பத்தர்கள் பரவுந்
தங்கு வெண்திரைக் கானல்
தண்வயற் காழிநன் னகரே. 1

தேவர் தானவர் பரந்து
திண்வரை மால்கடல் நிறுவி
நாவ தாலமிர் துண்ண
நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவ வென்றரு நஞ்சம்
உண்டவன் அமர்தரு மூதூர்
காவ லார்மதில் சூழ்ந்த
கடிபொழிற் காழிநன் னகரே. 2

கரியின் மாமுக முடைய
கணபதி தாதைபல் பூதந்
திரிய இல்பலிக் கேகுஞ்
செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கைநன் மாதர்
சதிபட மாநட மாடி
உரிய நாமங்கள் ஏத்தும்
ஒலிபுனற் காழிநன் னகரே. 3

சங்க வெண்குழைச் செவியன்
தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூணென வுடைய
அப்பனுக் கழகிய வூராந்
துங்க மாளிகை யுயர்ந்த
தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாண்மதி தடவு
மணிபொழிற் காழிநன் னகரே. 4

மங்கை கூறமர் மெய்யான்
மான்மறி யேந்திய கையான்
எங்க ளீசனென் றெழுவார்
இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
சங்கை யின்றிநல் நியமந்
தாஞ்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுவர் கீர்த்தி
மறையவர் காழிநன் னகரே. 5

நாறு கூவிள மத்தம்
நாகமுஞ் சூடிய நம்பன்
ஏறும் ஏறிய ஈசன்
இருந்தினி தமர்தரு மூதூர்
நீறு பூசிய வுருவர்
நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்
தேறு வார்கள்சென் றேத்துஞ்
சீர்திகழ் காழிநன் னகரே. 6

நடம தாடிய நாதன்
நந்திதன் முழவிடைக் காட்டில்
விடம மர்ந்தொரு காலம்
விரித்தறம் உரைத்தவற் கூராம்
இடம தாமறை பயில்வார்
இருந்தவர் திருந்திய போதிற்
குடம தார்மணி மாடங்
குலாவிய காழிநன் னகரே. 7

கார்கொள் மேனியவ் வரக்கன்
றன்கடுந் திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச
எழில்மலை யெடுத்தவன் நெரியச்
சீர்கொள் பாதத்தொர் விரலாற்
செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த
தண்வயற் காழிநன் னகரே. 8

மாலும் மாமல ரானும்
மருவிநின் றிகலிய மனத்தாற்
பாலுங் காண்பரி தாய
பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்
சேலும் வாளையுங் கயலுஞ்
செறிந்துதன் கிளையொடு மேய
ஆலுஞ் சாலிநற் கதிர்கள்
அணிவயற் காழிநன் னகரே 9

புத்தர் பொய்மிகு சமணர்
பொலிகழல் அடியிணை காணுஞ்
சித்த மற்றவர்க் கிலாமைத்
திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்
சித்த ரோடுநல் லமரர்
செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேயரு ளென்று
முறைமைசெய் காழிநன் னகரே. 10

ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு…
—- —- —- —-
—- —- —- —-
—- —- —- —-

இப்பதிகத்தில் 11-ம்செய்யுளின் பின் மூன்றடிகள் சிதைந்துபோயின.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment