பிறைகொள் சடையர் பாடல் வரிகள் (piraikol cataiyar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நறையூர்ச்சித்தீச்சுரம் – திருநறையூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : நறையூர்ச்சித்தீச்சுரம் – திருநறையூர்
சுவாமி : சித்தநாதேசுவரர்
அம்பாள் : அழகம்மை

பிறைகொள் சடையர்

பிறைகொள் சடையர் புலியி னுரியர்
பேழ்வாய் நாகத்தர்
கறைகொள் கண்டர் கபால
மேந்துங் கையர் கங்காளர்
மறைகொள் கீதம் பாடச்
சேடர் மனையில் மகிழ்வெய்திச்
சிறைகொள் வண்டு தேனார்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1

பொங்கார் சடையர் புனலர்
அனலர் பூதம் பாடவே
தங்கா தலியுந் தாமும்
உடனாய்த் தனியோர் விடையேறிக்
கொங்கார் கொன்றை வன்னி
மத்தஞ் சூடிக் குளிர்பொய்கைச்
செங்கால் அனமும் பெடையுஞ்
சேருஞ் சித்தீச் சரத்தாரே. 2

முடிகொள் சடையர் முளைவெண்
மதியர் மூவாமேனிமேல்
பொடிகொள் நூலர் புலியி
னதளர் புரிபுன் சடைதாழக்
கடிகொள் சோலை வயல்சூழ்
மடுவிற் கயலா ரினம்பாயக்
கொடிகொள் மாடக் குழாமார்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 3

பின்தாழ் சடைமேல் நகுவெண்
டலையர் பிரமன் தலையேந்தி
மின்தா ழுருவிற் சங்கார்
குழைதான் மிளிரும் ஒருகாதர்
பொன்தாழ் கொன்றை செருந்தி
புன்னை பொருந்து செண்பகம்
சென்றார் செல்வத் திருவார்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 4

நீரார் முடியர் கறைகொள்
கண்டர் மறைகள் நிறைநாவர்
பாரார் புகழால் பத்தர்
சித்தர் பாடி யாடவே
தேரார் வீதி முழவார்
விழவின் ஒலியுந் திசைசெல்லச்
சீரார் கோலம் பொலியும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 5

நீண்ட சடையர் நிரைகொள்
கொன்றை விரைகொள் மலர்மாலை
தூண்டு சுடர்பொன் னொளிகொள்
மேனிப் பவளத் தெழிலார்வந்
தீண்டு மாடம் எழிலார்
சோலை யிலங்கு கோபுரம்
தீண்டு மதியந் திகழும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 6

குழலார் சடையர் கொக்கின்
இறகர் கோல நிறமத்தம்
தழலார் மேனித் தவள
நீற்றர் சரிகோவ ணக்கீளர்
எழிலார் நாகம் புலியின்
உடைமேல் இசைத்து1 விடையேறிக்
கழலார் சிலம்பு புலம்ப
வருவார் சித்தீச் சரத்தாரே.

பாடம் : 1 இசைந்து 7

கரையார் கடல்சூழ் இலங்கை
மன்னன் கயிலை மலைதன்னை
வரையார் தோளா லெடுக்க
முடிகள் நெரித்து மனமொன்றி
உரையார் கீதம் பாட
நல்ல வுலப்பி லருள்செய்தார்
திரையார் புனல்சூழ் செல்வ
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 8

நெடியான் பிரமன் நேடிக்
காணார் நினைப்பார் மனத்தாராய்
அடியா ரவரும் அருமா
மறையும் அண்டத் தமரரும்
முடியால் வணங்கிக் குணங்க
ளேத்தி முதல்வா வருளென்னச்
செடியார் செந்நெல் திகழும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 9

நின்றுண் சமணர் இருந்துண்
தேரர் நீண்ட போர்வையார்
ஒன்று முணரா ஊமர்
வாயில் உரைகேட் டுழல்வீர்காள்
கன்றுண்பயப்பா லுண்ண முலையில்
கபால மயல்பொழியச்2
சென்றுண் டார்ந்து சேரும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பாடம் : 2 வழியச் 10

குயிலார் கோல மாத
விகள் குளிர்பூஞ் சுரபுன்னை
செயிலார் பொய்கை சேரும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரை
மயிலார் சோலை சூழ்ந்த
காழி மல்கு சம்பந்தன்
பயில்வார்க் கினிய பாடல்
வல்லார் பாவ நாசமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment