பருக்கையானை மத்தகத் பாடல் வரிகள் (parukkaiyanai mattakat) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்
சுவாமி : புற்றிடங்கொண்டார்
அம்பாள் : அல்லியம்பூங்கோதை

பருக்கையானை மத்தகத்

பருக்கையானை மத்தகத்
தரிக்குலத் துகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலந்
நிரக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழநீடு
மாடமாளி கைக்கொடி
அருக்கன்மண்ட லத்தணாவும்
அந்தணாரூ ரென்பதே. 1

விண்டவெள்ளெ ருக்கலர்ந்த
வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை
முடிச்சிவனி ருந்தவூர்
கெண்டைகொண்ட லர்ந்தகண்ணி
னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்டம் ஊடறுக்கும்
அந்தணரூ ரென்பதே. 2

கறுத்த நஞ்சம் உண்டிருண்ட
கண்டர்காலன் இன்னுயிர்
மறுத்துமாணி தன்றன்ஆகம்
வண்மைசெய்த மைந்தனூர்
வெறித்துமேதி யோடிமூசு
வள்ளைவெள்ளை நீள்கொடி
அறுத்துமண்டி யாவிபாயும்
அந்தணாரூ ரென்பதே. 3

அஞ்சுமொன்றி ஆறுவீசி
நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய
அஞ்சலென்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப்
பணைத்தகொங்கை நுண்ணிடை
அஞ்சொலார் அரங்கெடுக்கும்
அந்தணாரூ ரென்பதே. 4

சங்குலாவு திங்கள்சூடி
தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்றஎங்க
ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு
தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறும்
அந்தணாரூ ரென்பதே. 5

கள்ளநெஞ்ச வஞ்சகக்
கருத்தைவிட் டருத்தியோ
டுள்ளமொன்றி யுள்குவார்
உளத்துளான் உகந்தவூர்
துள்ளிவாளை பாய்வயற்
சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ளல்நாரை ஆரல்வாரும்
அந்தணாரூ ரென்பதே. 6

கங்கைபொங்கு செஞ்சடைக்
கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த
மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை
கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும்
அந்தணாரூ ரென்பதே. 7

வரைத்தலம் எடுத்தவன்
முடித்தலம்உ ரத்தொடும்
நெரித்தவன்பு ரத்தைமுன்
னெரித்தவன்னி ருந்தவூர்
நிரைத்தமாளி கைத்திருவின்
நேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய்ம டந்தைமார்கள்
ஆடுமாரூ ரென்பதே. 8

இருந்தவன்கி டந்தவன்னி
டந்துவிண் பறந்துமெய்
வருந்தியும் அளப்பொணாத
வானவன் மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி
செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும்
அந்தணாரூ ரென்பதே. 9

பறித்தவெண் டலைக்கடுப்
படுத்தமேனி யார்தவம்
வெறித்தவேடன் வேலைநஞ்சம்
உண்டகண்டன் மேவுமூர்
மறித்துமண்டு வண்டல்வாரி
மிண்டுநீர் வயற்செநெல்
அறுத்தவா யசும்புபாயு
மந்தணாரூ ரென்பதே. 10

வல்லிசோலை சூதநீடு
மன்னுவீதி பொன்னுலா
அல்லிமா தமர்ந்திருந்த
அந்தணாரூ ராதியை
நல்லசொல்லும் ஞானசம்
பந்தன்நாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானமாள
வல்லர்வாய்மை யாகவே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment