பாரார் பரவும் பழனத் பாடல் வரிகள் (parar paravum palanat) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நாகைக்காரோணம் – நாகப்பட்டினம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : நாகைக்காரோணம் – நாகப்பட்டினம்பாரார் பரவும் பழனத்

பாரார் பரவும் பழனத் தானைப்
பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானை
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்
திகழுந் திருமுடிமேற் றிங்கள் சூடிப்
பேரா யிரமுடைய பெம்மான் றன்னைப்
பிறர்தன்னைக் காட்சிக் கரியான் றன்னைக்
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 1

விண்ணோர் பெருமானை வீரட் டானை
வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்
பெண்ணானை ஆணானைப் பேடி யானைப்
பெரும்பெற்றத் தண்புலியூர் பேணி னானை
அண்ணா மலையானை ஆனைந் தாடும்
அணியாரூர் வீற்றிருந்த அம்மான் றன்னைக்
கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 2

சிறையார் வரிவண்டு தேனே பாடுந்
திருமறைக்காட் டெந்தை சிவலோ கனை
மறையான்ற வாய்மூருங் கீழ்வே ளூரும்
வலிவலமுந் தேவூரும் மன்னி யங்கே
உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்
பற்றியாள் கின்ற பரமன் றன்னைக்
கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 3

அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை
ஆச்சிரா மன்னகரு மானைக் காவும்
முன்னமே கோயிலாக் கொண்டான் றன்னை
மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச்
சின்னமாம் பன்மலர்க ளன்றே சூடிச்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக்
கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 4

நடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை
ஞானப் பெருங்கடலை நல்லூர் மேய
படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப்
பன்மையே பேசும் படிறன் றன்னை
மடையிடையே வாளை யுகளும் பொய்கை
மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக்
கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 5

புலங்கள்பூந் தேறல்வாய்ப் புகலிக் கோனைப்
பூம்புகார்க் கற்பகத்தை புன்கூர் மேய
அலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை
அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் றன்னை
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே
ஏகாச மிட்டியங்கும் ஈசன் றன்னைக்
கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6

பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப்
புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச்
சின்மணிய மூவிலைய சூலத் தானைத்
தென்சிராப் பள்ளிச் சிவலோ கனை
மன்மணியை வான்சுடலை யூராப் பேணி
வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக்
கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 7

வெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை
விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப்
புண்டலைய மால்யானை யுரிபோர்த் தானைப்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
எண்டிசையு மெரியாட வல்லான் றன்னை
ஏகம்ப மேயானை எம்மான் றன்னைக்
கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 8

சொல்லார்ந்த சோற்றுத் துறையான் றன்னைத்
தொன்னரக நன்னெறியாற் றூர்ப்பான் றன்னை
வில்லானை மீயச்சூர் மேவி னானை
வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்
பொல்லாதார் தம்மரண மூன்றும் பொன்றப்
பொறியரவம் மார்பாரப் பூண்டான் றன்னைக்
கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 9

மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்
மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யுஞ்
சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்
மெய்யென்று கருதாதே போத நெஞ்சே
பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை
அவன்பற்றே பற்றாகக் காணி னல்லாற்
கனைகடலின் றென்கழிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 10

நெடியானும் மலரவனும் நேடி யாங்கே
நேருருவங் காணாமே சென்று நின்ற
படியானைப் பாம்புரமே காத லானைப்
பாம்பரையோ டார்த்த படிறன் றன்னைச்
செடிநாறும் வெண்டலையிற் பிச்சைக் கென்று
சென்றானை நின்றியூர் மேயான் றன்னைக்
கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment