பண்டு செய்த பாடல் வரிகள் (pantu ceyta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம்
சுவாமி : ஏகாம்பரநாதர்
அம்பாள் : ஏலவார்குழலி

பண்டு செய்த

பண்டு செய்த
பழவினை யின்பயன்
கண்டுங் கண்டுங்
களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச்
செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி
யாய்துயர் தீரவே. 1

நச்சி நாளும்
நயந்தடி யார்தொழ
இச்சை யாலுமை
நங்கை வழிபடக்
கொச்சை யார்குறு
கார்செறி தீம்பொழிற்
கச்சி யேகம்ப
மேகை தொழுமினே. 2

ஊனி லாவி
இயங்கி உலகெலாம்
தானு லாவிய
தன்மைய ராகிலும்
வானு லாவிய
பாணி பிறங்கவெங்
கானி லாடுவர்
கச்சியே கம்பரே. 3

இமையா முக்கணர்
என்னெஞ்சத் துள்ளவர்
தமையா ரும்மறி
வொண்ணாத் தகைமையர்
இமையோ ரேத்த
இருந்தவன் ஏகம்பன்
நமையா ளும்மவ
னைத்தொழு மின்களே. 4

மருந்தி னோடுநற்
சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக்
காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி
னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி
ஏகம்பத் தெந்தையே. 5

பொருளி னோடுநற்
சுற்றமும் பற்றிலர்க்
கருளும் நன்மைதந்
தாய அரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை
யான்கச்சி யேகம்பம்
இருள்கெடச் சென்று
கைதொழு தேத்துமே. 6

மூக்கு வாய்செவி
கண்ணுட லாகிவந்
தாக்கும் ஐவர்தம்
ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை
நோய்வினை வாராமே
காக்கும் நாயகன்
கச்சி யேகம்பனே. 7

பண்ணில் ஓசை
பழத்தினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று
பேசற் கரியவன்
வண்ண மில்லி
வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி
கச்சி யேகம்பனே. 8

திருவின் நாயகன்
செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட
விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாயுணர்
வாயுணர் வல்லதோர்
கருவுள் நாயகன்
கச்சி யேகம்பனே. 9

இடுகு நுண்ணிடை
ஏந்திள மென்முலை
வடிவின் மாதர்
திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன்
பூம்பொழிற் கச்சியுள்
அடிகள் எம்மை
அருந்துயர் தீர்ப்பரே. 10

இலங்கை வேந்தன்
இராவணன் சென்றுதன்
விலங்க லையெடுக்
கவ்விர லூன்றலுங்
கலங்கிக் கச்சியே
கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளித்
தானெங்கள் நாதனே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment