பங்கமேறு மதிசேர்சடையார் பாடல் வரிகள் (pankameru maticercataiyar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சண்பைநகர் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருச்சண்பைநகர் – சீர்காழி
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்
அம்பாள் : பெரியநாயகி

பங்கமேறு மதிசேர்சடையார்

பங்கமேறு மதிசேர்சடையார் விடையார் பலவேதம்
அங்கமாறும் மறைநான்கவையு மானார் மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கே நுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பை நகராரே. 1

சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர் சுடர்க்கமலப்
போதகஞ்சேர் புண்ணியனார் பூத கணநாதர்
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில் விண்ணார்ந்த
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பை நகராரே. 2

மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப் பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே. 3

மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ் சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர் காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பை நகராரே. 4

கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம் அருள்செய்த
குலமார்கயிலைக் குன்றதுடைய1 கொல்லை யெருதேறி
நலமார் வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பை நகராரே.

பாடம் : 1 குன்றொத்துடைய 5

மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்து மெய்ம்மாலான்
சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன் மேதக்க
ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண் வயலுக்கே
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பை நகராரே. 6

இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று 7

இருளைப்புரையும் நிறத்திலரக்கன் றனையீ டழிவித்து
அருளைச்செய்யும் அம்மான்ஏரா ரந்தண் கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார் திரைக்கையால்
தரளத்தோடு பவளம்ஈனுஞ் சண்பை நகராரே. 8

மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசை மேலயனும்
எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன் மறையோதி
தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத் தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பை நகராரே. 9

போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளும் நிமலன் இருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே. 10

வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறைபேசிச்
சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பை நகர்மேய
அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம் பந்தன்சொற்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment