பாலுந்துறு திரளாயின பாடல் வரிகள் (palunturu tiralayina) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புள்ளமங்கை – பசுபதிகோயில் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்புள்ளமங்கை – பசுபதிகோயில்
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : அல்லியங்கோதை

பாலுந்துறு திரளாயின

பாலுந்துறு திரளாயின
பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு
பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய
கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை
யடையாவினை தானே. 1

மலையான்மகள் கணவன்மலி
கடல்சூழ்தரு தண்மைப்
புலையாயின களைவானிடம்
பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர்
கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி
ஆலந்துறை யதுவே. 2

கறையார்மிட றுடையான்கமழ்
கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன
லுடையான்புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை
பொழில்சூழ்திரு வாலந்
துறையானவன் நறையார்கழல்
தொழுமின்துதி செய்தே. 3

தணியார்மதி யரவின்னொடு
வைத்தானிடம் மொய்த்தெம்
பணியாயவன் அடியார்தொழு
தேத்தும்புள மங்கை
மணியார்தரு கனகம்மவை
வயிரத்திர ளோடும்
அணியார்மணல் அணைகாவிரி
ஆலந்துறை யதுவே. 4

மெய்த்தன்னுறும் வினைதீர்வகை
தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்தாரகில்
கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்னிடை ஆந்தைபல
பாடும்புள மங்கை
அத்தன்நமை யாள்வானிடம்
ஆலந்துறை யதுவே. 5

மன்னானவன் உலகிற்கொரு
மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன்
பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன்
இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம்
ஆலந்துறை யதுவே. 6

முடியார்தரு சடைமேல்முளை
யிளவெண்மதி சூடிப்
பொடியாடிய திருமேனியர்
பொழில்சூழ்புள மங்கைக்
கடியார்மலர் புனல்கொண்டுதன்
கழலேதொழு தேத்தும்
அடியார்தமக் கினியானிடம்
ஆலந்துறை யதுவே. 7

இலங்கைமனன் முடிதோளிற
எழிலார்திரு விரலால்
விலங்கல்லிடை யடர்த்தானிடம்
வேதம்பயின் றேத்திப்
புலன்கள்தமை வென்றார்புக
ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம்
ஆலந்துறை யதுவே. 8

செறியார்தரு வெள்ளைத்திரு
நீற்றின்திரு முண்டப்
பொறியார்தரு புரிநூல்வரை
மார்பன்புள மங்கை
வெறியார்தரு கமலத்தயன்
மாலுந்தனை நாடி
அறியாவகை நின்றானிடம்
ஆலந்துறை யதுவே. 9

நீதியறி யாதாரமண்
கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை
கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு
ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு
தன்மைபெற லாமே. 10

பொந்தின்னிடைத் தேனூறிய
பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி
ஆலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுட்
கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி
ஆடத்தவ மாமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment