ஓதுவித் தாய்முன் பாடல் வரிகள் (otuvit taymun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம்
சுவாமி : தழுவக்குழைந்த நாதர்
அம்பாள் : ஏலவார்குழலி

ஓதுவித் தாய்முன்

ஓதுவித் தாய்முன் அறவுரை
காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி
தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக்
கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி
வாய்கச்சி யேகம்பனே. 1

எத்தைக்கொண் டெத்தகை ஏழை
அமணொ டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
வித்தென்னக் கோகுசெய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினிற்
சோதியும் மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய்
பொழிற்கச்சி யேகம்பனே. 2

மெய்யம்பு கோத்த விசயனோ
டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய்
தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி
போற்றாக் கயவர்நெஞ்சிற்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில்
சூழ்கச்சி யேகம்பனே. 3

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை
ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற
மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை
வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்
காஞ்சியெம் பிஞ்ஞகனே. 4

உரைக்குங் கழிந்திங் குணர்வரி
யான்உள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல்
லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மால்எண்
வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க் கறியவொண்
ணானெங்கள் ஏகம்பனே. 5

கருவுற்ற நாள்முத லாகவுன்
பாதமே காண்பதற்கு
உருகிற்றென் னுள்ளமும் நானுங்
கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால
வாயா திருவாரூரா
ஒருபற் றிலாமையுங் கண்டிரங்
காய்கச்சி யேகம்பனே. 6

அரிஅயன் இந்திரன் சந்திரா
தித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை
யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக
முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை ஏகம்ப
என்னோ திருக்குறிப்பே. 7

பாம்பரைச் சேர்த்திப் படருஞ்
சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத்
தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பலைப் பூசித் தரையிற்
புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண்
டாய்கச்சி யேகம்பனே. 8

ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு
மானினி யல்லமென்னிற்
சான்றுகண் டாய்இவ் வுலகமெல்
லாந்தனி யேனென்றென்னை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத்
தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப
மேய சுடர்வண்ணனே. 9

உந்திநின் றாருன்றன் ஓலக்கச்
சூளைகள் வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ
ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு
மாலும் மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி எங்ஙன
மோவந் திறைஞ்சுவதே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment